செங்கோட்டையனின் 8 சூத்திர ஃபார்முலா விஜய்யை கரை சேர்க்குமா? ஈரோடு மாநாட்டுக்கு பிறகு பம்பரமாக சுத்தபோகும் செங்கோட்டையன்.. செங்கோட்டையன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்.. தவெக நிர்வாகிகளை சாட்டையை சுழற்றும் 50 வருட அரசியல் அனுபவம்.. விஜய் சரியான ஆளைத்தான் பிடிச்சிருக்காரு..!

மேற்கு மண்டலத்தின் கொங்கு மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் இந்த கூட்ட…

vijay sengottaiyan

மேற்கு மண்டலத்தின் கொங்கு மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் இந்த கூட்ட வேலைகளை முன்னின்று கவனித்து வருகிறார். மறுபுறம், தலைவர் விஜய் அமைதி மோடில் இருப்பதாக பேசப்பட்டாலும், கட்சிக்குள் இருக்கும் சில முக்கியமான ஐந்து சிக்கல்களைத் தீர்ப்பதில் அவர் தற்போது கவனம் செலுத்துவதாகவும் தகவல் வந்துள்ளது.

செங்கோட்டையன் ஏழு முதல் எட்டு அரசியல் வியூகங்களை கையில் எடுத்திருப்பதால், இனி எங்களுடைய அரசியல் அலை வீசப்போகிறது என்று தவெக-விலிருந்து குரல்கள் எழுந்துள்ளன. பனையூர் அலுவலகத்தில் இருந்து ஈரோடு நோக்கிய இந்த நகர்வுக்கு பின்னால் பல ரகசியத் திட்டங்கள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

தவெக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு பிறகு, பொதுவெளியில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வந்தார். சமீபத்தில் புதுவையிலும், அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த நிலையில், சுமார் 82 நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தின் அடுத்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் இந்த கூட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இக்கூட்டம், தவெக-வின் அடுத்த இன்னிங்ஸுக்கான மாஸ் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

எனினும், தேர்தலுக்கு இன்னும் 100 முதல் 120 நாட்களே உள்ள நிலையில், தற்போதைய அரசியல் வேகம் போதாது என்றும், கட்சிக்குள் இருக்கும் சில சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்றும் தவெக-வை சுற்றியுள்ள குரல்கள் வலியுறுத்துகின்றன. உதாரணமாக, மும்மொழி கொள்கை அமலாக்கம், முழுநேர டிஜிபி நியமன சர்ச்சை, நகராட்சி நிர்வாக துறையில் முறைக்கேடு குறித்த அமலாக்கத்துறை கடிதம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மற்றும் ஊழல் முறைகேடுகள் போன்ற ஆளும் கட்சிக்கு எதிரான முக்கிய விவகாரங்களில் தவெக பெரிய அளவில் களமாடவில்லை. எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு மற்றும் காவலாளி அஜித்குமார் மரணம் குறித்து மட்டுமே பெரிய போராட்டங்களை தவெக முன்னெடுத்தது.

சிறுபான்மையின மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவெக-வுக்கு நல்ல ஆதரவு இருந்தாலும், அவர்களின் பிரச்சினைகளை கையில் எடுக்கும் வேகம் போதவில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. ‘பெண்கள் அரசியலில் பங்கெடுக்காமல் விடுதலை சாத்தியமில்லை’ என்பதை உணர்ந்து, ராணி வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் போன்றோரை கொள்கை தலைவர்களாக விஜய் முன்னிறுத்தியுள்ளார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர் ஆகியோரையும் கொள்கைத் தலைவர்களாக ஏற்ற போதும், இந்த கொள்கைகளை பரப்பும் வேகம் குறைவாக உள்ளது.

மறுபுறம், போட்டியாளர்களான திமுக, சமீபத்தில் மதுரையில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டி வேகமாக நகர்கிறது. மேலும், 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது அவசியம். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் இன்னும் பொறுப்புகள் முழுமையாக நியமிக்கப்படவில்லை என்றும், இந்த குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்தால் மட்டுமே தவெகவின் தேர்தலில் வெற்றி சாத்தியமாகும் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன.

இந்த சூழலில்தான், கே.ஏ. செங்கோட்டையனின் எட்டு சூத்திர ஃபார்முலா விஜய்யை கரை சேர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெக-வில் உள்ள கோஷ்டி அரசியலை கட்டுப்படுத்த தலைமை கூடுதலாக கண்டிப்புடன் நடந்து கொண்ட நிலையில், செங்கோட்டையன் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ளார். அவரது முதல் வெற்றி ஃபார்முலாவாக, ஈரோடு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது உள்ளது.
இரண்டாவதாக, திமுக-வின் பகுதிகள் மட்டுமன்றி, அதிமுக-வின் கோட்டையான மேற்கு மண்டலத்திலும் வாக்குகளை அறுவடை செய்து, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வலுவான பதிலடி கொடுக்க அவர் வியூகம் அமைத்துள்ளார்.

மூன்றாவதாக, செங்கோட்டையன், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் நிலைப்பாட்டை தீவிரப்படுத்துகிறார். அதாவது, சி.எம். வேட்பாளராக விஜய்யை ஏற்று கொள்பவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே நோக்கம். இதற்காகவே, களத்தை ‘திமுக Vs தவெக’ என்று கட்டமைக்க செங்கோட்டையன் நகர்வுகளை தீவிரப்படுத்துகிறார்.

நான்காவதாக சிறுபான்மையின மக்களின் ஆதரவை தக்கவைத்து கொள்வதுடன், அதை மேலும் அதிகரிக்க, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான நாகை, வேதாரண்யம், ராமனாதபுரம் போன்ற பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், தென் மாவட்டங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், நிர்வாகிகளுக்கு புத்துயிர் அளிக்கவும் முடியும்.

ஐந்தாவது கடலோரப் பகுதிகள் மற்றும் மீனவ மக்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து, ஆர்ப்பாட்ட அரசியல் மூலம் குரல் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆறாவது முக்கிய நகர்வாக, அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களை வளைக்கும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டத்தில் உள்ள நாடார் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் இல்லாததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரை தவெக பக்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஏழாவதாக முக்கியத்துவம் கிடைக்காத பிற சமுதாய தலைவர்களையும் தவெக-வுக்குள் கொண்டு வந்து சமூக கணக்கு மூலம் வாக்குகளை அதிகரிக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. செங்கோட்டையன் டீம் கூடுதல் வேகம் காட்டுவதால், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எம்.எல்.ஏ. பதவியை துறந்து செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2025 தொடக்கத்தில் இலக்கான ஒன்றரை கோடி வீடுகள், ‘வீட்டுக்கு ஒரு ஓட்டு’ என்ற வியூகம் டிசம்பர் 18க்கு பிறகு ஹை ஸ்பீடில் பயணத்தை தொடங்கி 2026 இலக்கை அடையும் என்று தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.