தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சிறப்பான மற்றும் குறையற்ற நல்லாட்சியை வழங்கியிருந்தால், இன்று நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. ஒரு மாற்று சக்திக்கான தேவை எழாத பட்சத்தில், மக்கள் தங்கள் வாக்குகளை பிரித்து சிதறவிடாமல் இரு கட்சிகளுக்குள்ளேயே தங்களை சுருக்கி கொண்டிருப்பார்கள். அமெரிக்காவை போல ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருமுனை போட்டி மட்டுமே நிலவியிருக்கும். தற்போதைய பலமுனை போட்டிக்கு திராவிடக் கட்சிகளின் நிர்வாகத் தோல்விகளே அடித்தளமாக அமைந்துள்ளன.
பெரிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் திமுக-வும் அதிமுக-வும், மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தன்னிறைவை ஏற்படுத்தியிருந்தால், இன்று சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். மக்களின் முழுமையான ஆதரவு பெற்ற ஒரு கட்சியால் தனித்தே ஆட்சியை தக்கவைக்க முடியும். ஆனால், தங்கள் வாக்கு வங்கி சரிவதை தடுக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் பல சிறிய கட்சிகளின் ஆதரவை தேடும் அவலநிலை, இக்கட்சிகள் மக்கள் மனதில் முழுமையான இடத்தை பிடிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
திராவிடக் கட்சிகளின் கடந்த கால ஆட்சிகள் சுயநலமான முடிவுகளாலும், வாரிசு அரசியலாலும், ஊழல் புகார்களாலும் கறைபடிந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். ஒரு கட்சிக்கு மாற்று இன்னொரு கட்சி என்று மக்கள் வாக்களித்தாலும், இரு தரப்பிலும் பெரிய மாற்றங்கள் நிகழாததே மக்களின் ஏக்கத்திற்கு காரணம். “நிச்சயமாக ஒரு புதிய சக்தி வராதா? நம் துயரங்களை தீர்க்க யாராவது வர மாட்டார்களா? என்ற சாமானியனின் நீண்டகால ஏக்கம் தான், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இன்று உற்றுநோக்க வைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பும் பல புதிய முகங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கினர். ஆனால், அவர்களில் பலர் காலப்போக்கில் தங்களின் கொள்கைகளில் இருந்து விலகி சென்றதோ அல்லது திராவிட கட்சிகளுடனேயே சமரசம் செய்துகொண்டதோ மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. திரையுலகில் இருந்து வந்த விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர்கள் கூட தொடக்கத்தில் காட்டிய வேகத்தை தேர்தல் களத்தில் நிலைநாட்ட தவறினர். இந்த ஏமாற்றங்களின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் தான், மக்கள் விஜய்யின் வருகையை ஒரு நம்பிக்கையுடனும் அதே சமயம் எச்சரிக்கையுடனும் பார்க்கின்றனர்.
விஜய் மற்றவர்களுக்கு ஒரு விதிவிலக்காக இருப்பாரா அல்லது அவரும் காலப்போக்கில் நீர்த்துப்போவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே கோடி கணக்கிலான ஊதியத்தை துறந்து, தனது திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கியுள்ளது ஒரு நேர்மறையான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. எனினும், கொள்கை விளக்கங்கள் மற்றும் கள போராட்டங்களில் அவர் காட்டும் உறுதியே அவர் ஒரு உண்மையான மாற்றத்திற்கான நாயகனா என்பதை தீர்மானிக்கும். ஏமாற்றப்பட்ட மக்கள் மீண்டும் ஏமாற தயாராக இல்லை.
முடிவாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் ஒரு அக்னிப் பரீட்சை போன்றது. திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பது அப்போது தெரிந்துவிடும். விஜய் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்டால், அவர் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை படைக்க முடியும். இல்லையெனில், அவரும் கடந்த கால ஏமாற்றங்களின் பட்டியலில் ஒரு பெயராக மட்டுமே எஞ்சிவிடுவார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
