நாடு முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது பயணிகளுக்கு மிகுந்த பலனை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக கடல் வழி மெட்ரோ பயணம் குறித்த திட்டம் தயாராக இருப்பதாகவும், விரைவில் இதனை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, கொச்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடல் வழி மெட்ரோ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது 23 மின்சார படகுகள் இயக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக மும்பையில் கடல் வழி மெட்ரோ திட்டம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை, கொச்சி கடல் மெட்ரோ அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த திட்ட அறிக்கை தயாரிப்பு பணி முடிவடைந்தவுடன், 2026 ஆம் ஆண்டு கடல் வழி மெட்ரோ சேவை மும்பையில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் 720 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை இருந்தாலும், கடல் வழிப் போக்குவரத்து அதிகமாக இல்லை. எனவே, இதற்கான முயற்சியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால், இதுவரை இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும், இப்போது நவிமும்பை உள்ளிட்ட சில பகுதிகளில், கிழக்கு கடற்கரை வழியாக இணைக்கும் பகுதிகளில் நீர் வழி மெட்ரோவை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பயணங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப அரசும் வேற லெவலில் திட்டம் இயற்றினால்தான், போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் சமாளிக்க முடியும். இந்த கடல் வழி மெட்ரோ திட்டத்திற்கு பொதுமக்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மும்பை மட்டுமின்றி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் கடல் வழி மெட்ரோவை செயல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.