மனிதர்கள் என்றாலே வலி உணரும் திறன், சிந்திக்கும் திறன் விழிப்புணர்வு ஆகியவை இருக்கும். ஆனால், இவை மூன்றும் இல்லாத செயற்கை மனிதனை லேபரட்டரியில் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், உடல் உறுப்புகள் தானத்திற்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக தேர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக செயற்கையாக மனிதனை வெறும் உடலுறுப்புகளுக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு மிகப்பெரிய மருத்துவப் புரட்சியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், உலகளவில் உடல் உறுப்புக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் நோயாளிகள் உடல் உறுப்புத் தானத்திற்காக காத்திருக்கின்றனர்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், செயற்கையாக உருவாக்கப்படும் மனிதனிலிருந்து உடல் உறுப்புகளை எடுத்து நோயாளிகளுக்கு பொருத்த முடியும். இதற்கான பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிந்திக்கும் திறன், விழிப்புணர்வு, வலியுணர்வு இல்லாத உயிருடன் இருக்கும் மனித உடல்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு பெண்ணின் கருவில் இருப்பது போலவே செயற்கையான கருப்பைகள் உருவாக்கப்பட்டு, அதில் செயற்கையான குழந்தைகளை உருவாக்கி, அதை லேபரட்டரியில் வளர்க்க முடியும் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சிந்திக்கும் திறன், விழிப்புணர்வு, வலி இல்லாத அதாவது மூளை என்ற அம்சமே இல்லாத மனிதனை உடல் உறுப்புக்காக மட்டுமே உருவாக்க முடியும் என்ற ஆராய்ச்சி வெற்றி பெறுமா? அப்படியே வெற்றி பெற்றாலும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்புமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.