மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இதுவே ‘வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு’ என்று கூறி, அங்கு அமெரிக்க தரப்படை வீரர்களை இறக்குமாறு சவுதி அரேபியா அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த ஒரு வாரமாக டிரம்புடன் நடத்திய தொடர்ச்சியான உரையாடல்களில், ஈரானின் தற்போதைய அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். ஈரானின் ஆட்சி அதிகாரத்தை மாற்றினால் மட்டுமே வளைகுடா நாடுகளுக்கு நீண்ட கால பாதுகாப்பு கிடைக்கும் என்பது சவுதி தரப்பின் வாதமாக உள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்கனவே ‘ஆட்சி மாற்றம்’ ஏற்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை கைப்பற்றவும், தற்போதைய அரசை முழுமையாக அகற்றவும் அமெரிக்க படைகளை நேரடியாக ஈரானுக்குள் அனுப்ப வேண்டும் என்று முகமது பின் சல்மான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி வருகிறார். இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் நியூயார்க் டைம்ஸ் இதழ் வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஈரானிய போரின் விளைவாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ‘மிகவும் அபாயகரமான’ நிலையை எட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு எரிசக்தி நெருக்கடி காரணமாக தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. நியூசிலாந்து அரசு பெட்ரோல் விலையை சமாளிக்க குடும்பங்களுக்கு நேரடி பண உதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஸ்லோவேனியா போன்ற நாடுகள் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் எரிபொருள் ரேஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலன் ஒன்றுக்கு 4 டாலராக உயர்ந்துள்ளது, இது போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட மிகப்பெரிய உயர்வாகும். போரை இன்னும் தீவிரப்படுத்தினால் பெட்ரோல் விலை மேலும் உயரும் என்று டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வேலையை பாதியிலேயே விட்டுவிட்டால் ஈரானால் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று சவுதி இளவரசர் அவரை சமாதானப்படுத்த முயன்று வருகிறார். வெளிப்படையாக தூதரக ரீதியான தீர்வை விரும்புவதாகச் சவுதி கூறினாலும், ரகசியமாக ஈரானை தனிமைப்படுத்த துடிப்பது இந்த அறிக்கைகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உலகளாவிய எரிசக்தி சூழல் மோசமடைந்துள்ளதால், முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து வருகிறது. ஒரு பக்கம் போர் முனையில் தீவிரமான தாக்குதல்கள் நடந்தாலும், மறுபக்கம் உலக நாடுகள் தங்களின் இருப்புக்காக பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர தொடங்கியுள்ளன.
இறுதியாக, மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று திருப்பத்தில் உலகம் நின்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா தனது படைகளை நேரடியாக ஈரானில் இறக்குமா அல்லது எரிபொருள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு பின்வாங்குமா என்பது டிரம்பின் அடுத்தகட்ட நகர்வை பொறுத்தே அமையும். இந்த போரில் யார் ஜெயிக்கிறாங்கன்றது முக்கியம் இல்லை, உலக அமைதி எப்போ திரும்பும்கிறதுதான் முக்கியம்” என்றாலும், தற்போதைய சூழல் ஒரு மிகப்பெரிய உலகளாவிய நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
