நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி அவரை காவலில் வைக்க முடியாது என்று கூறி விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும், பட்டியல் இன மக்கள் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து நேற்று அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்து அதன் பின்னர் திருச்சி மாவட்ட கூடுதல் நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சாட்டை துரைமுருகன் வழக்கறிஞர் இது புனையப்பட்ட வழக்கு என்றும் சாட்டை துரைமுருகன் பாடிய பாடல் அதிமுகவினர் உருவாக்கியது என்றும் பல ஆண்டுகளாக ஏராளமான மேடைகளில் பாடப்பட்ட பாடல் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து நீதிமன்ற காவல் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்து சாட்டை துரைமுருகனை விடுவித்தார். இது போலீசார் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து பாடிய பாடலை அவரே உருவாக்கி பாடியதாக காவல்துறையினர் நினைத்துதான் இந்த வழக்கை பதிவு செய்தனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாடல் அதிமுகவினால் உருவாக்கப்பட்டது என்பது பின்னர் தான் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கு நிற்காமல் நீதிமன்ற காவல் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் செய்தியாளர்கள் பேசிய போது தன்னை தமிழ்நாடு அரசு கொலை செய்ய முயற்சிக்கிறது என்றும், தன்மேல் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தின் நாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.