பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி ஹைதராபாத்தில் நடத்திய ரம்ஜான் கண்காட்சியில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா, ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் நேரத்தில் கண்காட்சி நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இவர் நடத்திவரும் கண்காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள். மேலும், இந்த கண்காட்சியில் 400க்கும் அதிகமான சில்லறை கடைகளும் 60 உணவு பிராண்டுகளும் ஒரே இடத்தில் இணைக்கப்பட்டு, மிகப்பெரிய ரம்ஜான் கண்காட்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சி மூலம் கிட்டத்தட்ட 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், பதினொரு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த இந்த கண்காட்சியில் நேற்று இரண்டு நபர்கள் திடீரென சண்டை போட்டுக் கொண்டதாகவும், அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலே நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வெளியேறினர்.
இதுகுறித்து போலீசார் தகவல் அறிந்ததும் விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கியை பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாகவும், அவர் ஒரு கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது, அதே கடையில் பொருள் வாங்க வந்த இன்னொருவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் தீவிரமடைந்ததால், அவர் திடீரென துப்பாக்கியை எடுத்து, தன்னுடன் பிரச்சனை செய்தவரை பயமுறுத்தும் வகையில் மேலே நோக்கி சுட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் கண்காட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.