ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வு

By John A

Published:

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அவர் பெயர் சொல்லும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் முத்தான திட்டம் தான் அம்மா உணவகம். தமிழகமெங்கும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறுகின்றனர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கு பசியாற்றுவது இந்த அம்மா உணவங்கள்தான். மேலும் சென்னைக்கு புதிதாக வேலை தேடி வருவோரின் பசி ஆற்றும் தாயாகவும் இந்த அம்மா உணவகங்கள் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு தினமும் காலை மற்றும் மதியம் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், இரவு நேரங்களில் சப்பாத்தி போன்றவை சுடச்சுட தயார் செய்யப்பட்டு ரூ. 1, 3, 5 ஆகிய முறைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆவேச பேச்சு…

கொரோனா லாக்டவுன் காலங்களில் வேலை வாய்ப்பின்றி தவித்த பல்லாயிரம் பேருக்கு அம்மா உணவகங்களே வயிற்றுப் பசி ஆற்றியது. இந்த அம்மா உணவகத்தில் சென்னை மாநகராட்சியில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 4500 பணியாளர்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ரூ.300 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.

இந்த சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது இவர்களின் சம்பளத்தினை உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி இதுவரை 300 சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 25 உயர்த்தி ரூ. 325 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தற்போது சென்னை மாநகராட்சியில் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 3100 மகளிர் பணிபுரிகின்றனர். தற்போது உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைவருக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 3.07 கோடி வரை கூடுதல் செலவாகும்.