இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக் உள்பட பல்வேறு துறைகள் மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த துறை என்றால் அது ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் தான் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. மேலும், இந்த துறை இன்னும் மூன்று ஆண்டுகளில் 45 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், ஆறு ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடியை எட்டும் என்றும் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐஸ்கிரீம் என்பது குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் விற்கக்கூடிய பொருள் இல்லை என்றாலும், ஐஸ்கிரீம்க்காக செலவழிக்கக்கூடிய நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை வித்தியாசமான சுவைகளில் நுகர்வோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
பால் மற்றும் பொதிப்பொருட்கள் முக்கிய மூலப்பொருளாக இருந்தாலும், உடல் நிலையை பாதிக்காத வண்ணம் தற்போது நுணுக்கமாக ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்கள் பொதுவாக ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் என்பதால், புதுமையான கலவைகளை வைத்து, புதிய சுவைகளுடன் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, தாவரம் சார்ந்த, குறைந்த சர்க்கரை அளவுடனும் அதிக புரதம் கொண்ட ஐஸ்கிரீம்கள் தற்போது அறிமுகமாகி வருகின்றன. இந்த ஐஸ்கிரீம்கள் தான் தற்போது நாடு முழுவதும் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற முதல் நிலை நகரங்களில் மட்டுமின்றி, இரண்டாம் நிலை நகரங்களிலும் தற்போது ஐஸ்கிரீம் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தான் மார்ச் 27ஆம் தேதி ஐஸ்கிரீம் தினமாக கொண்டாடும் அளவுக்கு இந்த துறை வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
ஐஸ்கிரீம் உற்பத்தி அதிகரித்துள்ளதன் காரணமாக, அதைச் சார்ந்த கால்நடை மற்றும் பால் உற்பத்தி துறை, பால் வளர்ப்பு துறைகளும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐஸ்கிரீம் சந்தை என்பது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு இடமாக உள்ளது. மேலும், ஐஸ்கிரீம்க்காக செலவழிக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.
எனவே, கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமின்றி, வரும் எட்டு ஆண்டுகளிலும் ஐஸ்கிரீம் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்கு முக்கியத்துவம் பெறும் என்றும் கூறப்படுகிறது.