ரூ.83,00,00,00,00,000. இந்தத் தொகை எவ்வளவு என்பதை உங்களால் கூற முடியுமா? அந்த தொகையை தான் மோசடி செய்த ஒரு நபரை கேரளாவில் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிதுவேனியா நாட்டை சேர்ந்த அலெக்ஸ் என்ற 46 வயது நபர், அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த அவர், பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க அரசு அவரது நிறுவனத்திற்கு தடை விதித்தது.
மேலும், இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அலெக்ஸ் மற்றும் அவருடைய கூட்டாளி செர்டா ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதனை அடுத்து, இன்டர்போல் போலீசார் அனைத்து நாடுகளுக்கும் இவரைப் பற்றிய தகவல் அனுப்பிய நிலையில், அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், தற்போது அவர் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, அவர் டெல்லியில் விசாரணை செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு அவரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அனுமதியின் பேரில், தற்காலிக பிடிவாரண்டு பெற்று அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரும் அவருடைய கூட்டாளியும் மணி லாண்டரிங் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர் மோசடி செய்த தொகையின் மொத்த மதிப்பு 83 லட்சம் கோடி என்றும் கூறப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.