இந்திய மதிப்பில் ரூபாய் 5900 கோடி மதிப்புள்ள பிட்காயின் ஆவணம் தவறுதலாக குப்பைத் தொட்டிக்கு சென்ற நிலையில், அதை மீட்டெடுக்க முதலீட்டாளர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 8000 பிட்காயின்களை வாங்கி வைத்த நிலையில், அந்த பிட்காயின்களை வாங்கியதையே அவர் சில ஆண்டுகளில் மறந்து விட்டார்.
இந்த நிலையில் சமீப காலமாக பிட்காயின் மதிப்பு உச்சத்திற்கு சென்றதால், தற்போது அவர் வாங்கி வைத்துள்ள பிட்காயின் மதிப்பு, இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 5900 கோடி என்று கூறப்படுகிறது.
திடீரென அவருக்கு பிட்காயின் வாங்கியது ஞாபகத்திற்கு வர, அவர் அதற்கான ஆதாரம் உள்ள ஹார்ட் டிரைவரை தேட தொடங்கினார். ஆனால், அவரது முன்னாள் காதலி அந்த ஹார்ட் டிரைவரை தவறுதலாக குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதாக கூறியதை அடுத்து, அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, குப்பை கிடங்கில் உள்ள தனது ஹார்ட் டிரைவை தேட அனுமதிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள், அவ்வளவு குப்பைகளை தோண்டி கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றும், குப்பைகளை தோண்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதை மீட்டெடுக்க தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்த இருப்பதாகவும், தனக்கு ஹார்ட் டிஸ்க் கிடைத்தால், சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கு 10 சதவீதம் தொகையை தானமாக அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.