ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது டொமைனை அம்பானி விருப்பப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக தர தயார் என்று துபாயை சேர்ந்த இரண்டு குட்டீஸ்கள் அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ வாங்கி விட்டதை அடுத்து இரண்டையும் ஒன்றாக இணைத்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற ஒரு புதிய பெயரை வைக்க அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் டெல்லியை சேர்ந்த டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் என்ற டொமைனை வாங்கிவிட்டதாகவும், தனது வெளிநாட்டு படிப்புக்கு தேவையான பணத்தை அம்பானி கொடுத்தால் அவருக்கு இந்த டொமைனை தருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் துபாயில் சேர்ந்த ஜெய்னம், ஜீவிகா என்ற இரட்டையர்கள், அம்பானி வாங்காவிட்டால் என்ன, அந்த டொமைனை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளனர். இந்த குட்டீஸ் இருவரும் ஏற்கனவே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,JioHotstar.com என்ற டொமைனை தற்போது வைத்துள்ள குட்டீஸ்கள் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த டொமைனை வாங்க விரும்பினால் அவர்களுக்கு நாங்கள் இலவசமாக தர தயார் என்று புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குட்டீஸ்களில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்பானி அதை வாங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.