ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 2 போட்டிகளில் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துவிட்டார் ரோஹித் ஷர்மா. அப்படி இருந்தும் மற்ற வீரர்கள் நல்ல பங்களிப்பை அளிக்க தவறியதால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியும் அடைந்திருந்தது.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த பின்னரும் கூட ஒரு நாள் போட்டிகளில் அதே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து ஆடிவரும் ரோஹித் ஷர்மா, இலங்கைக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பவர் பிளே ஓவர்களுக்கு முன்பாகவே அரைச்சதத்தை எடுத்து அசத்தியிருந்தார். அவர் நினைத்திருந்தால் அதற்கு பின்னாவது மெதுவாக ரன் சேர்த்து சதமடித்து கூட இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருக்கலாம்.
ஆனால் அப்படி எதுவும் நினைக்காத ரோஹித் ஷர்மா, முதலிலேயே தன்னால் முடிந்த வரை ரன்களை மிக வேகமாக ஏற்றிவிட்டு அவுட்டானார். சுழற்பந்து வீச்சு சாதகமாக இருக்கும் மிடில் ஓவர்களில் ரன் சேர்க்க கடினமாக இருக்கும் என்பதால் தான் இந்த அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
அப்படி இருந்தும் அவர் அவுட்டான பின்னர் வந்த வீரர்கள் குறைவான இலக்கை கூட அடிக்க முடியாமல் சிறிய இடைவெளியில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். கோலி, ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் கூட சிறப்பாக ஆட முடியாமல் போக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 208 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது.
இதனால் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல் தொடரிலும் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டி மட்டும் மீதம் இருப்பதால் அதில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் கலக்கியிருந்தாலும் பேட்டிங்கில் நிறைய தவறுகளை செய்திருந்தது. அதனை எல்லாம் திருத்திக் கொண்டு மூன்றாவது போட்டியில் களமிறங்கினால் மட்டுமே தொடரை சமன் செய்யவாவது முடியும். இல்லையென்றால் 27 ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி இழப்பதற்கு நேரிடும் என்ற என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா, கடந்த ஒரு வருடத்தில் செய்த விஷயம் தற்போது பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. கடந்த 2008 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளின் பவர் பிளே ஓவர்களில் நாற்பதுக்கும் அதிகமான ரன்களை ஐந்து முறை தான் ரோஹித் சர்மா அடித்துள்ளார்.
ஆனால் கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 9 முறை பவர் பிளே ஓவர்களிலேயே 40க்கும் அதிகமான ரன்களை ரோஹித் சர்மா அடித்துள்ள நிலையில் அவரது அதிரடி அடுத்த ஆண்டு நடக்கும் முக்கியமான ஐசிசி தொடர்களில் பிரதிபலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.