ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் டி20 உலக கோப்பை தொடரில் இளம் வீரரான ரியான் பராக் தேர்வாவார் என அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அவர் டி20 உலக கோப்பையில் இடம் பெறாத நிலையில் அடுத்து நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்தார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்திருந்த ரியான் பராக், எந்த போட்டியிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஐபிஎல் தொடரில் ஆடியதில் இருந்து அப்படியே நேர்மறையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால், அவரது பேட்டிங்கும் பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்திருந்தது. இதன் பெயரில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் நிச்சயம் ரியான் பராக் இடம்பெறமாட்டார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த ருத்துராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவருக்கும் இலங்கைத் தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் போக கொஞ்சம் கூட ஃபார்மில் இல்லாத ரியான் பராக் தேர்வாகி இருந்தார்.
அத்துடன் டி20 தொடர் மட்டுமில்லாமல் ஒருநாள் தொடரிலும் ரியான் பராக் இடம் பெற்றுள்ள நிலையில் பெரிய அளவில் ரசிகர்கள் இதனை விமர்சித்து வந்தனர். இதனிடையே இலங்கை அணிக்கு எதிராக தற்போது இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் அவர்கள் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளனர்.
ஆனால் முதல் போட்டியில் ரியான் பராக்கிற்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்திருந்தும் அவர் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார். அந்த சமயத்தில் ரசிகர்கள் பெரிய அளவில் விமர்சித்து எதிர் கருத்துக்களைத் தெரிவித்த நிலையில் தான் பந்து வீச்சில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார் ரியான் பராக்.
கடைசி கட்டத்தில் பந்து வீச தொடங்கி இருந்த ரியான் பராக், தனது முதல் ஓவரில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து 20 வது ஓவரையும் அவர் வீசியிருந்த நிலையில் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட் எடுக்க இலங்கை அணி ஆல் அவுட்டானது. அத்துடன் 8 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் அள்ளி இருந்தார்.
அப்படி ஒரு சூழலில் தான் எந்த இந்திய பந்து வீச்சாளரும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளில் செய்யாத ஒரு முக்கியமான சாதனையை பேட்ஸ்மேன் ரியான் பராக் படைத்துள்ளார். இதுவரை எந்த இந்திய பந்து வீச்சாளர்களும் டி20 போட்டிகளில் தங்கள் முதல் மூன்று விக்கெட்டுகளை போல்டு முறையில் அவுட் எடுத்ததில்லை.
இந்த நிலையில் தான், தனது முதல் 3 டி20 சர்வதேச விக்கெட்டுகளையும் போல்டாக எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ரியான் பராக்.