அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மற்றும் அதன் வர்த்தகக் கூட்டாளிகள் மீது இரண்டாம் நிலை தடைகளை உடனடியாக விதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் இந்தியாவுக்கு ஒரு நிம்மதியை அளித்துள்ளது. எனினும், “இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடலாம்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சந்திப்புக்குப்பின் டிரம்பின் மென்மையான நிலைப்பாடு
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அலாஸ்காவில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, டிரம்ப் தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்தியுள்ளார். ஒரு முன்னணி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அலாஸ்கா உச்சி மாநாடு “சிறப்பாக நடந்தது” என்றும், அதை “10/10” என்றும் மதிப்பிட்டார். “இந்த சந்திப்பு காரணமாக, நான் உடனடியாக அதைப்பற்றி சிந்திக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதை பற்றிச் சிந்திக்க நேரிடலாம், இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடந்தது” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வரை ரஷ்யாவிற்கு எதிராக இருந்த டிரம்ப், “நான் இப்போது இரண்டாம் நிலை தடைகளை விதித்தால், அது அவர்களுக்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளார். இது, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை குறிப்பதாக உலக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா மீதான கடுமையான வரி விதிப்புகள்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டிக்கும் வகையில், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 25% இறக்குமதி வரி விதித்திருந்தார். இதுமட்டுமல்லாமல், கூடுதலாக 25% வரி விதித்து, இந்திப் பொருட்களுக்கான மொத்த வரியை 50% ஆக உயர்த்தினார். அத்துடன், ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
அலாஸ்கா சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தியா மீது விதிக்கப்பட்ட கடுமையான வரிகள் காரணமாக, ரஷ்யா தனது “இரண்டாவது பெரிய வாடிக்கையாளரை” இழந்து வருவதாகவும், இதுவே டிரம்ப்-புதின் சந்திப்பிற்கான காரணம் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இருப்பினும், டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பிறகும் ரஷ்ய எண்ணெய்யின் இறக்குமதி நிறுத்தப்படவில்லை என இந்தியா உறுதியாக தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் எட்டப்படவில்லை: டிரம்ப்-ன் வேண்டுகோள்
அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் போருக்கு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதில் இரு தலைவர்களும் தோல்வியடைந்தனர். இந்த சந்திப்பு மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்த போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தனது பேட்டியில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டியது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கைகளில் உள்ளது என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், டிரம்ப், “இன்று புதின் என்னிடம் ஆயிரக்கணக்கான கைதிகள் அடங்கிய ஒரு புத்தகத்தை கொடுத்தார், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்ததன் மூலம், கைதிகள் பரிமாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
