2000 ரூபாய் திரும்ப பெற்றதன் எதிரொலி.. 24 மணி நேரமும் வேலை செய்யும் பணம் அச்சடிக்கும் ஊழியர்கள்..!

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்பத் தருவதாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் பணக்காரர்கள் மற்றும் பணத்தை பதுக்கியவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை வைத்திருந்தவர்கள் தற்போது வங்கிகளில் நோட்டை கொடுத்துவிட்டு 500 ரூபாய் நோட்டை பெற்று வருவதால் 500 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்திய ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக நான்கு அச்சகங்களில் 24 மணி நேரமும் வேலை செய்யுமாறு ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து நோட்டு அச்சடிக்கும் பணியில் இருக்கும் இரண்டு பேர் தெரிவித்த தகவலின் படி 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு பதிலாக வாடிக்கையாளர்களூக்கு 500 ரூபாய் நோட்டை கொடுக்க வேண்டும் என்பதற்காக இரவு பகலாக வேலை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்

2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கியில் பலர் மாற்றவில்லை என்றாலும் நகைக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் கொடுத்து வருகின்றனர். ஆனால் அந்த கடைக்காரர்கள் வங்கிகளில் தான் மொத்தமாக கொண்டு வந்து ரூ.2000ஐ கொடுக்கின்றனர். இதனால் வேறு வழி என்று வங்கிகள் அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் 500 ரூபாய் நோட்டு வங்கியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து 24 மணி நேரமும் ரிசர்வ் வங்கியின் பிரிண்டிங் பிரஸ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்காக வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிப்பதற்காகவும் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியவில்லை என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது கூட கரன்சி நோட்டுகள் அச்சடிப்பதை இந்த அளவுக்கு துரிதப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமாக நான்கு அச்சகங்கள் இருக்கும் நிலையில் அந்த அச்சகங்கள் அனைத்துமே 24 மணி நேரமும் வேலை செய்து வருவதாகவும் ஒரு சில நாட்கள் மட்டும் 18 முதல் 19 மணி நேரம் வேலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு இந்த இக்கட்டான நிலையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.