காங்கிரஸ் கட்சியை தனது கூட்டணிக்குள் கொண்டு வர தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான் என்றும், ராகுல் காந்தியிடம் விஜய் தரப்பில் உள்ளவர்கள் பேசி வருகிறார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ரவி பாலகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். தி.மு.க. கூட 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்புகிறது. அதேபோல்தான் காங்கிரஸ் கட்சியும் குறைந்தது 50 முதல் 60 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது” என்று ரவி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால், தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், “இப்படியே போனால் சிங்கிள் டிஜிட் ஆகிவிடும்” என்றும் அவர் கூறினார்.
ரவி பாலகிருஷ்ணன், “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் 50 முதல் 60 தொகுதிகள் கிடைக்கும் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளையும் திருப்திப்படுத்த முடியும்” என்றும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஜான் ஆரோக்கியசாமி, ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், அது உண்மைதான் என்றும், “ராகுல் காந்தி நல்ல முடிவு எடுத்தால் தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையாகலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, “ராகுல் காந்தியின் ஆசியுடன் தான் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய்ஆரம்பித்தார் ” என்று ஒரு பேச்சு இருந்து வரும் நிலையில், பா.ஜ.க.வை முழுமையாக தனது கொள்கை எதிரியாக அறிவித்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என உறுதிபட விஜய் தெரிவித்துள்ளதால், கண்டிப்பாக அவர் காங்கிரஸ் கட்சியை நோக்கிதான் செல்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை தமிழக காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ரவி பாலகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். “தி.மு.க. கூட்டணி உடையக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் காலம் என்ன செய்யுமோ என்று எங்களுக்குத் தெரியாது” என்று கூறிய ரவி பாலகிருஷ்ணன், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் பிரிந்துவிட்டால், கூட்டணி அவ்வளவுதான் என்று அரசியல் வியூக நிபுணர்கள் கூறிவரும் நிலையில், விஜய் மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு நடக்குமா? தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் சேருமா? தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்படுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் முதலில் யார் ஃபர்ஸ்ட் என்பது முக்கியமல்ல, Last-ல யார் ஃபர்ஸ்ட் வராங்கரதுதான் முக்கியம், தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இந்த கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Congress-TVK Alliance Talks Are True,” Says Tamil Nadu Congress Secretary Ravi Balakrishnan, Sparking Political Buzz!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
