தமிழக அரசியலில் கொள்கை மற்றும் லட்சியம் என்பதை விட, ‘ராஜ்யசபா சீட்’ என்பதுதான் கூட்டணிகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள அவலத்தை தற்போதைய அரசியல் சூழல் அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகிறது. ஒரு காலத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்றும், கருணாநிதியின் குடும்ப அரசியலை வேரோடு அறுக்க வேண்டும் என்றும் சூளுரைத்து வைகோ மதிமுகவை தொடங்கினார். ஆனால், காலம் செல்ல செல்ல தனது கட்சியின் இருப்பு மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக, அதே திமுகவுடன் கூட்டணி சேர்ந்து சமரசம் செய்து கொண்டார். “திமுகவின் கதவுகள் இனி வைகோவுக்காக திறக்கப்படாது” என்று கூறப்பட்ட இடத்திலேயே, மீண்டும் ஒரு சீட்டுக்காக மண்டியிடும் நிலை ஏற்பட்டது, கொள்கை அரசியலின் வீழ்ச்சியையே காட்டுகிறது.
இதேபோன்ற ஒரு வியத்தகு மாற்றத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனிடமும் காண முடிந்தது. தனது ஆரம்பகால அரசியல் உரைகளில் மு.க.ஸ்டாலினை ஒரு தலைவராகவே ஏற்க மறுத்த கமல், கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் என்ற பெயரை சொன்னாலே போதும் என்று மேடைகளில் முழங்கினார். திராவிட கட்சிகள் இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று விமர்சித்தவர், ஒரு ராஜ்யசபா சீட் என்றவுடன், அதே திமுகவுடன் கைகோர்த்து தேர்தல் களத்தில் நிற்கிறார். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பலம் இல்லாதபோது, குறுக்கு வழியில் நாடாளுமன்றம் செல்ல கூட்டணிகளே இவர்களுக்கு புகலிடமாக அமைகின்றன.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிலையும் இதிலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. விஜயகாந்த் இருந்த காலத்தில் “மக்களுடன் தான் கூட்டணி” என்று கர்ஜித்த அந்த இயக்கம், இன்று தனது பிழைப்பிற்காக யார் ராஜ்யசபா சீட் தருகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொள்கை ரீதியான உடன்பாடுகளை விட, ஒரு எம்.பி பதவியே இவர்களின் அரசியல் பேரத்தை உறுதி செய்கிறது. இது தொண்டர்களிடையே பெரும் சலிப்பை ஏற்படுத்தினாலும், கட்சி தலைமைகளுக்கு தங்களின் பதவி கனவுகளே முக்கியமாக தெரிகிறது.
பாமகவின் அரசியல் நகர்வுகளும் ராஜ்யசபா சீட்டை நோக்கியே நகர்வதை பார்க்க முடிகிறது. அன்புமணி ராமதாஸை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், பாமக தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றி கொள்கிறது. கடந்த காலங்களில் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்த அன்புமணி, தற்போது ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். தங்களின் வாக்கு வங்கி சிதறுவதை பற்றியோ அல்லது மக்களின் நம்பிக்கையை பற்றியோ கவலைப்படாமல், மேலவை உறுப்பினர் பதவியே பிரதான இலக்காக மாற்றப்பட்டுள்ளது.
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்த அல்லது அந்த சவாலை எதிர்கொள்ள அஞ்சும் தலைவர்களுக்கு, ராஜ்யசபா என்பது ஒரு ‘பாதுகாப்பான புகலிடமாக’ மாறிவிட்டது. தேர்தல்களில் நின்று வெற்றி பெற்று எம்பியாக முடியாதவர்கள், பெரிய கட்சிகளிடம் சரணடைந்து அதன் மூலம் பதவிகளை பெறுவதையே தங்களின் அரசியல் வெற்றியாக கருதுகின்றனர். இது ஜனநாயகத்தின் அடிப்படை பண்பையே சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். மக்களின் வாக்குகளை பெற முடியாதவர்கள், எப்படி மக்களின் பிரதிநிதிகளாக மேலவையில் செயல்பட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
இறுதியாக, தமிழக அரசியல் என்பது தற்போது மக்கள் நலனை விட, தனிநபர் பதவிகளுக்கான சந்தையாக மாறிப்போயுள்ளது. வைகோ முதல் கமல் வரை, அன்புமணி முதல் தேமுதிக வரை அனைவருமே ஒரு சீட்டுக்காக தங்களின் கொள்கைகளை அடகு வைக்க தயங்குவதில்லை. இத்தகைய ‘சீட் அரசியல்’ வாக்காளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் மக்கள் இத்தகைய சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கு பாடம் புகட்டுவார்களா அல்லது மீண்டும் அதே பிம்பங்களுக்குள் சிக்கி கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொள்கை இல்லாத கூட்டணியால் தலைவர்களுக்கு பதவி கிடைக்கலாம், ஆனால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
