ரஜினி-துரைமுருகன் பேச்சு.. சர்ச்சைக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்

By John A

Published:

கடந்த இரு நாட்களாக தமிழக சினிமா-அரசியல் வட்டாரத்தில் ஹாட் செய்தியாக வந்த ரஜினி- துரை முருகன் பேச்சுக்களுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினி பேசும் போது துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டினார். அவரிடம் ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லி எப்படி செய்யலாம் என்று கேட்டால் அதற்கு பதில் கொடுக்காமல் சந்தோஷம் ஒன்று ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்.

அதற்கு அர்த்தம் யாருக்கும் தெரியாது. பள்ளியில் புதிய மாணவர்களைச் சமாளிப்பது பெரிய விஷயம் இல்லை. பழைய மாணவர்களைச் சமாளிப்பதே பெரிய சாமர்த்தியம் என்று துரை முருகனை கலாய்த்துப் பேச ஒட்டுமொத்த அரங்கமும் குபீரென சிரித்தது. முதல்வர் ஸ்டாலினும் குலுங்கிச் சிரித்தார்.

சினிமாவுக்காக படித்த சான்றிதழையே கிழித்துப் போட்டு வந்த மாரி செல்ராஜ்.. படைப்புகள் மேல் இவ்ளோ காதலா?

இப்படி துரைமுருகனை கலாய்க்கும் நோக்கில் ரஜினி பேசியது சினிமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் துரைமுருகனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், சினிமாவிலி மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் உதிர்ந்து, தாடி வைச்சு பேரன் பேத்தி எடுத்த நிலையிலும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கும் வயசான நடிகர்கள் எல்லாம் ஒதுங்கிப் போய்விட்டால் இளம் ஹீரோக்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று ரஜினியை பதிலுக்கு கலாய்த்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இவ்விரு கருத்துக்களும் அடுத்தடுத்து முற்றிய நிலையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் துரைமுருகன் கருத்து குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், துரைமுருகன் எனது நீண்டகால நண்பர், அதனால் அவர் என்ன கூறினாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்களது நட்பு என்றும் தொடரும் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

மேலும் விஜய்யின் கட்சிக்கொடி, பாடல் குறித்த கேள்விக்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று அதிரடியாகக் கூறினார் ரஜினிகாந்த்.