மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக அரசியலில் வளர்ந்து வரும் சக்தியான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், ராகுல் காந்தி தரப்பில் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு ரகசிய கருத்துக்கணிப்பின் முடிவுகள், காங்கிரஸ் தலைமைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாம். அந்த கருத்துக்கணிப்பின்படி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், அது தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வழிவகுக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.
இந்த ரகசிய கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் கேரளா ஆகிய மூன்று தென் மாநிலங்களில் காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு சாதகமான அலை வீசக்கூடும் என நம்பப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய்யின் அரசியல் எழுச்சி, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை வெகுவாக ஈர்த்துள்ளதால், தவெகவை இணைப்பதன் மூலம் இந்த கூட்டணி பெரும் பலம் பெறும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறதாம். விஜய்யின் மக்கள் செல்வாக்கை, தென் மாநிலங்களில் காங்கிரஸின் புத்துயிர் பெறுவதற்கான ஒரு அஸ்திரமாக ராகுல் காந்தி பார்க்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சாதகமான முடிவுகளை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை தற்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவிலேயே அல்லது திரைமறைவிலோ தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளில், தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், குறைந்தது 50 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளில் துணை முதல்வர் பதவி குறித்தும் பேசப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு வருவதால், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும். விஜய் முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பதும் திட்டமாக இருக்கும். ஒருவேளை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் – தவெக கூட்டணி ஆட்சி அமையுமானால், விஜய்யின் கட்சியினருக்கு முக்கிய பதவிகள் ஒதுக்கப்படலாம். இத்தகையதொரு உடன்பாடு எட்டப்பட்டால், அது தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்நாடு தவிர, தவெகவுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் காங்கிரஸ்-தவெக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ராகுல் காந்திக்கு கிடைத்த தகவல் மூலம் தெரியவந்துள்ளது. விஜய்யின் அரசியல் தாக்கம் அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையில், இந்த மூன்று மாநிலங்களிலும் கூட்டாக செயல்படுவதற்கான வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருகிறதாம். குறிப்பாக, அரசியலில் மூன்று தென் மாநிலங்களின் வெற்றிகள், தேசிய அரசியலில் தனிப்பட்ட வகைஇயில் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கும் என்றும் தலைமை நம்புகிறது.
இந்த வியூக பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால், டிசம்பர் மாத இறுதியில் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராகுல் காந்தியின் இந்த துணிச்சலான நடவடிக்கை, தென் மாநிலங்களில் காங்கிரஸுக்கும், அகில இந்திய அளவில் தவெகவுக்கும் அரசியல் ரீதியாக பெரும் ஊக்கத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா அல்லது இந்த யூகங்கள் வெறும் வதந்திகளா என்பதை டிசம்பர் இறுதிக்குள் உறுதியாக அறிந்துகொள்ளலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
