தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு அரசியல் கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தாலும், தனது கட்சியின் கொள்கை எதிரி பா.ஜ.க. என்று கூறியது ராகுல் காந்தியை ரொம்பவே கவர்ந்து விட்டதாகவும், அகில இந்திய அளவில் நமக்கு பா.ஜ.க. கொள்கை எதிரியாக இருக்கும் நிலையில், இதேபோன்று கொள்கை எதிரியாக இருக்கும் விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை என்று அவர் மனம் மாறி வருவதாகவும், எனவே தமிழகத்தில் தி.மு.க. இல்லாத ஒரு புதிய இந்தியா கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கொடுக்கப்பட்டன, அதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த முறை அதிகமாக கிடைக்க வாய்ப்பு இல்லை. தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. உள்ளே வருவதால், குறைக்கத்தான் முயற்சி செய்வார்களே தவிர அதிகரிக்க வாய்ப்பு இல்லை. எனவே, அதே 25 தொகுதிகளை வைத்துக்கொண்டு, அதே 18 தொகுதிகளில் ஜெயித்தால் கூட காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை. ஆனால், விஜயுடன் கூட்டு சேர்ந்தால் 50 தொகுதிகள் வரை பெற்று மிகப்பெரிய வளர்ச்சியை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெறலாம் என்ற எண்ணம் தற்போது ராகுல் காந்திக்கு தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.
என்னதான் பா.ஜ.க.வைத் தனது எதிரி என்று தி.மு.க. கூறி கொண்டாலும், மறைமுகமாக சில புரிதல்களை தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, தி.மு.க.வை பா.ஜ.க.வின் உறுதியான எதிரி என்பதை நம்ப முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் விஜய், பா.ஜ.கவை தனது கொள்கை எதிரி என்பதை உறுதியாக இருப்பதால், விஜய்யால் நமக்கு லாபம் கிடைக்கும் என்றும் ராகுல் காந்தியின் மனதை தமிழக காங்கிரஸில் உள்ள சிலர் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விஜய்க்கு கேரளா மற்றும் பாண்டிச்சேரியிலும் நல்ல செல்வாக்கு இருப்பதால், ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அங்கு நடக்கும் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு லாபம் உண்டு என்ற கருத்தையும் ராகுல் காந்தி முன் வைக்கப்பட்டதாகவும், ராகுல் காந்தியும் விஜய்யுடன் கூட்டணி வைக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ராகுல் காந்தி மற்றும் விஜய் சந்திப்பு நடக்கும் என்றும் காங்கிரஸ் வட்டங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் மற்றும் விஜய் கூட்டணி சேர்ந்து விட்டால், சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக இங்கே வந்துவிடும் என்றும், அதுமட்டுமின்றி தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சுகளும் இக்கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்றும், எனவே தி.மு.க. இல்லாத ஒரு இந்தியா கூட்டணி ஏற்பட வாய்ப்பு கூட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறினாலும், மேற்கண்டவை எல்லாம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களின் யூகமாகத்தான் இருக்கிறது தவிர, இதெல்லாம் உண்மையில் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
