புதுடெல்லி : புதியதாக பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் தற்போது முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சபாநாயகராக ஓம்பிர்லாவும், எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தியும் தேர்வு செய்யப்பட்டனர். நாடாளுமன்றம் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜுலை 1) நாடாளுமன்றமே அனல் பறந்தது. காரணம் பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் அனல் பறந்த விவாதங்கள் தான். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவரின் கருத்துக்கு மோடி பதில் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி பா.ஜ.க.அரசையும், பிரதமர்மோடியையும் சற்று அதிகமாகவே விமர்சித்தார். மேலும் இந்துக் கடவுள் சிவன், சீக்கியக் கடவுள் குருநானக் படங்களைக் கையில் ஏந்தி காட்டிப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சபாநாயகர் ராகுல் காந்தியைக் கண்டித்தார். மேலும் பா.ஜ.க. வினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு பொய்களைப் பரப்பும் மதம் அல்ல என்றும் பேசினார்.
ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வு
இதற்கு அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான பேச்சு நேற்று நாடாளுமன்றத்தையே அனல் பறக்க வைத்தது. இதனால் ராகுல் காந்தியின் கருத்துக்களை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கினார்.
இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் மீண்டும் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம், “மோடியின் உலகத்தில் வேண்டுமானால் உண்மை நீக்கப்படலாம். ஆனால் நிஜ உலகத்தில் உண்மையை யாராலும் நீக்க முடியாது.
நான் அவையில் பேசியது எல்லாமே உண்மை. எவ்வளவு வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளுங்கள். உங்களால் உண்மையை மாற்ற முடியாது.” என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த அனல் பறக்கும் பேச்சு வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட இண்டியா கூட்டணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.