’புஷ்பா 2’ ரிலீஸால் ரூ.426 கோடி பங்குச்சந்தையில் லாபம் பெற்ற நிறுவனம்..!

By Bala Siva

Published:

 

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் காரணமாக 426 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் லாபம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம், ரிலீஸுக்கு முன்பே முன்பதிவு மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வசூல் இந்திய அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை இந்தியாவில் உள்ள தனது அனைத்து திரையரங்குகளிலும் பிவிஆர் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் காரணமாக பிவிஆர்-ஐநாக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவுகள் குவிந்து வர, மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளி அன்று பிவிஆர்-ஐநாக்ஸ் பங்குகளின் விலை ரூ.1540 என்று இருந்த நிலையில், திங்கட்கிழமை முதல் இந்த பங்குகள் உயரத் தொடங்கியதாகவும், தற்போது இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் ரூ.300 உயர்ந்து ரூ.1829 என விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இந்நிறுவனத்திற்கு ஒரு சில நாட்களில் ரூ.426 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும், ரிலீஸ்க்கு பின்னர் இந்த படம் வெற்றி பெறும் செய்தி வெளியானால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர்-ஐநாக்ஸ் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக புஷ்பா 2 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இந்நிறுவனத்திற்கு பங்குச்சந்தையின் மூலம் கிடைத்த லாபம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.