திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் வாகன போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்நிலையில் தலைகவசம் அணியாமல் வந்த வாலிபரை காவலர் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து அவர் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகரில் வாகன போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று பாளையங்கோட்டை குலவணிகபுரம் ரெயில்வே கேட் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் சார்லஸ் கால் மீது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞரை திருநெல்வேலி போக்குவரத்து போலீஸ்காரர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீஸ்காரர் சார்லசை போக்குவரத்து பிரிவில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் விசாரணை நடத்தி வருகிறார்.