தேர்தல் நெருங்கி வரும் போதெல்லாம், அரசியல் கட்சிகளில் சினிமா பிரபலங்கள் இணைவதும், ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவதும் சாதாரணமாக நடக்கும். அந்த வகையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தவர் முன்னாள் விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமார்.
பி.டி. செல்வகுமாரை பற்றிய ஊடகங்களின் சித்தரிப்பு பெரும்பாலும் முழுமையடையாததாகவே உள்ளது. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் இவரை, விஜய்யின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘புலி’ போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் என்ற அளவிலேயே அடையாளப்படுத்துகின்றன. ஆனால், இந்த சினிமா நிர்வாகிக்கு ஒரு திடமான அரசியல் பின்னணி உண்டு.
பி.டி. செல்வகுமார், கேமராவின் பின்னணியில் பணியாற்றிய அனுபவங்களை தாண்டி, தேர்தல் அரசியலில் நேரடியாக களம் கண்டவர். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டார்.
அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, வெறும் 3000 வாக்குகளை மட்டுமே பெற்று, டெபாசிட் இழந்தார். இது களத்தில் அவர் சந்தித்த கடுமையான தோல்வியாகும். இதே தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கூட 14,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று அசுர வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கூட, திமுக கூட்டணி வைத்து ராஜ்யசபா சீட்டும் வாங்கிவிட்டார். கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் அவரது கட்சி இடம்பெறும். கட்சியின் தலைவரே திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் சூழலில், அக்கட்சியின் முன்னாள் வேட்பாளரான பி.டி. செல்வகுமார், திமுகவில் இணைந்திருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஆனால் எந்த ஒரு மீடியாவும் பிடி செல்வகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்தவர், அந்த கட்சியின் வேட்பாளர், தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் என்பதை கூறாமல் மறைத்துவிட்டதா? அல்லது மறந்துவிட்டதா? என தெரியவில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
