கேரளாவில் ஆட்டத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி.. ‘மிஷன் 2026’ என்ற அதிரடி திட்டத்தால் இடது சாரி கூட்டணி அதிர்ச்சி.. உள்ளாட்சி தேர்தல் வெற்றி.. விஜய்யுடனான கூட்டணி வாய்ப்பு.. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, பிரியங்கா காந்தி பொறுப்பேற்று நடத்தும் தேர்தல்.. எல்லாமே காங்கிரசுக்கு சாதகம்.. 10 வருடங்களுக்கு பின் ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்?

கேரள அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற ‘மிஷன் 2026’ என்ற அதிரடி திட்டத்தை தொடங்கியுள்ளது. ராகுல்…

priynk pinrayi

கேரள அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற ‘மிஷன் 2026’ என்ற அதிரடி திட்டத்தை தொடங்கியுள்ளது. ராகுல் காந்தி விட்டு சென்ற வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் இப்போது கேரள காங்கிரஸின் ‘நம்பிக்கை நட்சத்திரமாக’ உருவெடுத்துள்ளார். கேரளாவில் நிலவும் உள்கட்சி பூசல்களைக் களைந்து, தொண்டர்களை ஒருமுகப்படுத்தி தேர்தலை சந்திக்கப் பிரியங்கா காந்தி வகுத்துள்ள இந்த வியூகம், ஆளும் இடதுசாரி முன்னணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற மிகப்பெரிய வெற்றி, பிரியங்காவின் ‘மிஷன் 2026’ திட்டத்திற்கு ஒரு வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது. சுமார் 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மையானவற்றை UDF கைப்பற்றியது, பினராயி விஜயன் அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை சட்டமன்றத் தேர்தல் வரை தற்காத்து கொள்ள, வயநாட்டில் வரும் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ‘மிஷன் 2026’ மாநாட்டை நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தொகுதி வாரியாக பலவீனங்களை சரிசெய்து, வெற்றிக்கான தேர்தல் வியூகங்களை வகுக்க அவர் முடிவு செய்துள்ளார்.

பிரியங்கா காந்தியின் இந்த திட்டத்தில் மிக முக்கியமான அம்சம், கேரள காங்கிரஸின் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிகார போட்டியை கட்டுப்படுத்துவதாகும். சில முக்கிய தலைவர்கள் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைந்து, அவர்களை ஒரே மேடையில் பயணிக்க வைப்பதில் பிரியங்கா ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன், இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கு தேர்தலில் அதிக முக்கியத்துவம் அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரியங்காவின் நேரடி மேற்பார்வையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.

பினராயி விஜயன் தலைமையிலான அரசு எதிர்கொண்டு வரும் ஊழல் புகார்கள், சபரிமலை விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்து செல்லப் பிரியங்கா அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்’ பெயரை மத்திய பாஜக அரசு மாற்ற முயல்வதை எதிர்த்து அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள், கேரளாவின் கிராமப்புற வாக்காளர்களைக் காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்வதோடு, பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்கான எதிர் வியூகங்களையும் அவர் தனது ‘மிஷன் 2026’ திட்டத்தில் இணைத்துள்ளார்.

மலையாள மொழியை கற்றுக்கொள்ள தொடங்கியுள்ள பிரியங்கா காந்தி, கேரள மக்களுடன் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தி வருகிறார். தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் அவரது ஆளுமை, கேரள பெண்களிடையே அவருக்கு ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளது. வெறும் தேர்தல் பிரச்சாரத்தோடு நின்றுவிடாமல், வயநாடு தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் குறைகளை கேட்டு வரும் அவர், தான் ஒரு “விருந்தினராக வரும் எம்பி அல்ல என்பதை செயலில் நிரூபித்து வருகிறார். இந்த மக்கள் தொடர்பு முறை, தேர்தல் நேரத்தில் காங்கிரஸிற்கு பெரும் சாதகமாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இறுதியாக, பிரியங்கா காந்தியின் ‘மிஷன் 2026’ வெற்றி பெற்றால், அது கேரளாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் காங்கிரஸின் எழுச்சிக்கு வித்திடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இதர தென்னிந்திய பகுதிகளில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர, ஆட்சியில் பங்கு கொள்ள இது ஒரு முன்னோட்டமாக இருக்கும். சில தேர்தல் வியூக வல்லுநர்களுடன் பிரியங்கா நடத்திய சந்திப்புகள், அவர் ஒரு அறிவியல் ரீதியான தேர்தல் முறையை கையாள போவதை உணர்த்துகின்றன. 2026-ல் கேரளா அரியணையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியை அமர்த்துவதே பிரியங்காவின் தற்போதைய ஒற்றை இலக்காகும். இந்த ‘மிஷன்’ நிறைவேறினால், இந்திய அரசியலில் பிரியங்கா காந்தியின் அதிகாரம் இன்னும் பலமடங்கு உயரும்.