“மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால்… எந்த சாம்ராஜ்யமும் நிலைக்காது!” என்ற முழக்கத்துடன் 2026 தேர்தல் களத்தை நோக்கி நகரும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கிவிட்டது. இனி வரும் காலங்களில் தமிழகத்தில் அரசியல் செய்ய விரும்புவோர் விஜய்யை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ தான் இயங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் ஒரு நடிகரின் வருகையாக மட்டும் இல்லாமல், பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கும் ஒரு பெரும் சக்தியாக பார்க்கப்படுகிறது. 2026-ல் விஜய் நேரடியாக ஆட்சியை கைப்பற்றுவாரா, எதிர்க்கட்சி தலைவராக அமர்வாரா அல்லது ஒரு ‘தொங்கு சட்டசபை’ சூழலில் கிங் மேக்கராக உருவெடுப்பாரா என்ற மூன்று வாய்ப்புகளே அரசியல் மேடைகளில் பிரதான விவாதங்களாக உள்ளன.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை உற்றுநோக்கும்போது, அவர் தமிழ்நாட்டின் ‘சந்திரபாபு நாயுடு’ போன்ற ஒரு தொலைநோக்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகியாக தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார் என்பது புலப்படுகிறது. ஆந்திர அரசியலில் ஒரு மாபெரும் சக்தியை தன் மதியூகத்தால் எதிர்கொண்ட சந்திரபாபு நாயுடுவை போல, விஜய்யும் தனது கட்சி பணிகளை மிகவும் திட்டமிட்டு, தரவுகளின் அடிப்படையில் நகர்த்தி வருகிறார். 2026 தேர்தலில் திமுகவை ஒரு ‘தீய சக்தி’ என அவர் அறிவித்திருப்பதும், அதே சமயம் பாஜகவின் கொள்கைகளை சாடுவதும், அவர் ஒரு தெளிவான மும்முனை போட்டியை விரும்புகிறார் என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் இனி விஜய் இல்லாமல் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, விஜய்யால் திமுகவை முழுமையாக வீழ்த்த முடியாவிட்டாலும், அந்த கட்சியை கடும் பதற்றத்தில் வைத்திருக்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், விஜய் எதிர்க்கட்சியாக வரும் பட்சத்தில், அது தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு புதிய ரத்தத்தை பாய்ச்சும். தற்போதைய எதிர்க்கட்சிகள் போல சும்மா இருக்காமல், ஆளுங்கட்சிக்கு ஒவ்வொரு விவகாரத்திலும் கடும் குடைச்சல் கொடுத்து, மக்களின் குரலாக தன்னை நிலைநிறுத்த அவர் முனைப்பு காட்டுவார். இந்த ஆக்ரோஷமான எதிர்க்கட்சி பணி, வரும் 20 ஆண்டுகளுக்கு தமிழக அரசியலில் திமுகவின் ஒரே மற்றும் மிகப்பெரிய சிம்மசொப்பனமாக தவெகவை மாற்றும்.
கருத்துக்கணிப்புகளின்படி, தவெகவிற்கு சுமார் 23 முதல் 30 சதவீத வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது ஒரு வலுவான வாக்கு வங்கியாகும், இது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கியிலும் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தும். குறிப்பாக, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ சூழல் உருவானால், விஜய்யின் ஆதரவு இன்றி யாரும் கோட்டையில் அமர முடியாது என்ற நிலை ஏற்படும். இத்தகைய சூழலில், ஆட்சி அமைப்பதற்கான சாவி விஜய்யின் கையில் இருக்கும், இது அவரை தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும்.
முடிவாக, தமிழக அரசியல் இனி ஒரு புதிய பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது. விஜய் வெறும் சினிமா புகழை மட்டும் நம்பி வராமல், ஒரு தெளிவான அரசியல் கொள்கையுடனும், இளைஞர் பட்டாளத்துடனும் களம் காண்கிறார். 2026-ல் அவர் முதல்வராக அரியணையில் அமர்ந்தாலும் அல்லது ஒரு வலிமையான எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தாலும், தமிழக அரசியலில் மாற்றத்திற்கான வித்தை அவர் விதைத்துவிட்டார். மக்கள் அதிகாரத்தைத் தன் கையில் எடுக்கத் தயாராகிவிட்ட இந்த வேளையில், எந்த சாம்ராஜ்யம் நிலைக்கும், எது வீழும் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உலகிற்கு உணர்த்தும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
