ஆன்லைனில் மோசடி செய்பவர்கள் விதவிதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, புதியதாக பாப்-அப் மெசேஜ்களை அனுப்பி, அதன் மூலம் நமது வங்கி கணக்கின் விவரங்களை பெற்று, சேமிப்பை ஒரே நொடியில் காலி செய்யும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பொதுவாக இதுவரை, மோசடியாளர்கள் ஒரு மெசேஜ் அனுப்பி, அதில் ஒரு லிங்க் இணைத்து, அந்த லிங்கை கிளிக் செய்தால், நமது போனை ஹேக் செய்யும் முறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது, அவர்கள் பாப்-அப் மெசேஜ் அனுப்பும் முறையை கையாண்டு வருகின்றனர்.
இந்த பாப்-அப் மெசேஜ் இன்பாக்ஸில் சேமிக்கப்படாது. நேரடியாகவே, போன் லாக் நிலையில் இருந்தாலும் திரையில் தோன்றும். அதில் ஏதேனும் கவர்ச்சிகரமான ஆஃபர்கள் காணப்பட்டால், பயனர்கள் அதை ஆசைப்பட்டு கிளிக் செய்துவிட்டால், உடனடியாக அது நமது மொபைல் போனை ஹேக் செய்து, வங்கி விவரங்களை திருடிவிடும். அதன் பின், அடுத்த நொடியே நமது வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு முழுவதுமாக காலியாகும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த பாப்-அப் மெசேஜ் முறையை, இயற்கை பேரிடர்கள் வரும்போது சில நாடுகள், தங்கள் மக்களுக்கு முன்னெச்சரிக்கை தெரிவிக்க பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது, மோசடியாளர்கள் இதை தங்கள் மோசடிக்கு பயன்படுத்தி வருவதால், இதைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.