தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திமுகவை ‘நரி தந்திரம் செய்யும் கட்சி’ என்றும் ‘முரண்களின் முன்னேற்ற கழகம்’ என்றும் விமர்சித்திருப்பது, தேர்தல் களம் ஒரு நேரடி போட்டியாக மாறப்போவதை உணர்த்துகிறது.
விஜய்யைப் பொறுத்தவரை, களத்தில் ஆளுங்கட்சியான திமுக மட்டுமே தனது முதன்மை எதிரி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். கருத்துக்கணிப்புகள் விஜய்க்கு 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் இருப்பதாக கூறினாலும், எதார்த்தத்தில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு சுமார் 10 முதல் 16 சதவீதம் வரை இருக்கலாம் என்பதே கள நிலவரமாக தெரிகிறது.
புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய சவாலாக இருப்பது ‘பூத் மேனேஜ்மென்ட்’ எனப்படும் வாக்குச்சாவடி நிர்வாகமாகும். அங்கீகரிக்கப்பட்ட பெரிய கட்சிகளுக்கு அனுபவம் வாய்ந்த பூத் முகவர்கள் இருப்பார்கள்; அவர்கள் வாக்குப்பதிவு தினத்தன்று காலை முதல் மாலை வரை அதிகாரிகளுடனும், பிற கட்சியினருடனும் மல்லுக்கட்டி வேலையை சரியாக செய்வார்கள்.
ஆனால், விஜய் போன்ற புதியவர்களுக்கு இந்த அனுபவம் கிடையாது. 2019-ல் டிடிவி தினகரன் பெரிய கூட்டத்தை கூட்டினாலும், பூத் அளவில் வேலையை செய்ய ஆட்கள் இல்லாததால்தான் அவரது வாக்கு சதவீதம் எதிர்பார்த்ததை விட குறைந்தது. இந்த அனுபவ குறைபாட்டை ஈடுகட்டவே, தேர்தல் அரசியலில் ஊறிப்போன மூத்த தலைவர்களையும் பிற கட்சிகளையும் விஜய் தனது கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்துள்ளது.
கூட்டணி விவகாரத்தில், அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யுடன் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றன. எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக விடக்கூடாது என்ற ஒற்றை புள்ளியில் இவர்கள் அனைவரும் இணையக்கூடும். குறிப்பாக, ஓபிஎஸ் தரப்பினர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.
அதே சமயம், அண்ணா திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் விஜய்யின் பக்கம் சாயக்கூடும் என்ற பேச்சுகள் அண்ணா திமுகவின் ‘கூடாரம் காலியாகிறது’ என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் விஜய்யுடன் இணைந்த பின்னர் நிச்சயம் வேறு சில தலைவர்கள் வருவார்கள் என்றும், அது தவெக-விற்குத் தேவையான அந்தத் தேர்தல் அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
2026 தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திலேயே தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கு பின்னால் பாஜகவின் ராஜ்யசபா சீட் கணக்குகளும் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே, ஜனவரி முதல் வாரத்திற்குள்ளாகவே தனது கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீட்டை விஜய் இறுதி செய்ய வேண்டியது அவசியம். புதிய கட்சி என்பதால் நிதியாதாரங்கள் மற்றும் தேர்தல் பணிகளை திட்டமிட அதிக காலம் தேவைப்படும்.
தாமதமாகும் ஒவ்வொரு நாளும் திமுக மற்றும் அதிமுக போன்ற பலமான இயந்திரம் கொண்ட கட்சிகளுக்கு சாதகமாக முடியும். குறிப்பாக, விஜய்யின் வாக்கு வங்கி என்பது 40 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் அதிகமாக இருப்பதாலும், திமுகவின் வாக்கு வங்கி 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் நிலையாக இருப்பதாலும், இந்த கடும் போட்டியை எதிர்கொள்ள விஜய் மிக வேகமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
அண்ணா திமுகவை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் அவர்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுவது உறுதி. விஜய்யின் வருகை அண்ணா திமுகவின் வாக்குகளை பிரிக்கும் என்று கணிக்கப்பட்டாலும், இரட்டை இலை சின்னத்திற்கென்று இருக்கும் பாரம்பரிய வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட முடியாது. விஜய்யின் தவெக இரண்டாம் இடத்தை பிடிக்குமா என்பது அந்தந்த தொகுதிகளில் அவர் நிறுத்தும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் இணையும் கூட்டணி கட்சிகளைப் பொறுத்தே அமையும்.
தஞ்சாவூர், ராமநாதபுரம், கொங்கு மண்டலத்தின் சில பகுதிகள் மற்றும் ஆண்டிப்பட்டி போன்ற இடங்களில் ஓபிஎஸ், டிடிவி மற்றும் செங்கோட்டையன் ஆகியோரின் செல்வாக்கு விஜய்க்கு வெற்றியை பெற்றுத்தர உதவலாம். இருப்பினும், மாநிலம் முழுவதும் ஒரு பெரிய அலையை உருவாக்குவது விஜய்க்கு இன்னும் சவாலான காரியமாகவே உள்ளது.
திமுக தனது 40 சதவீத வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விஜய்யின் அரசியல் ஆட்டம் என்பது வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடாமல், களத்தில் வாக்குகளாக மாற வேண்டுமானால், அவர் அனுபவம் வாய்ந்த பழைய அரசியல்வாதிகளின் துணையை நாடி ஒரு வலுவான ‘மெகா கூட்டணியை’ உருவாக்க வேண்டும். ஜனவரி மாதம் பிறக்கப்போகும் நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
