அரசியல்வாதிகள் சரியில்லை, ஆட்சியாளர்கள் சரியில்லை” என 50 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, “நாம் கண்ணீர் சிந்தும் ஜாதி இல்லை, புரட்சிக்கான ஜாதி என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றும், “இனிமேல் அழுதால் நீதி கிடைக்காது, பொங்கி எழுந்தால் தான் நீதி கிடைக்கும்” என்று மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய தலைவரான விஜய்யை மக்கள் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்களின் எண்ணிக்கையை விட, இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் பிடிக்காதவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர். அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பிக்கொண்டே மாறி மாறி திமுகவையும், அதிமுகவையும் ஆட்சியில் வைத்து வருகிறார்கள் என்பதும், அவர்களது புலம்பல் இன்று வரை நிற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக யாராவது வருவார்களா என்று கோடிக்கணக்கான மக்கள் இதுவரை காத்திருந்தனர். விஜயகாந்த் வந்தார், ஆனால் அவரும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றிவிட்டார். கமல்ஹாசன் வந்தார், அவரும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றிவிட்டார். அரசியலுக்கு வருபவர்கள் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று கூறுகிறார்கள். ஆனால், ஒரு தேர்தல், இரண்டு தேர்தல் முடிந்தவுடன் திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைந்து விடுகிறார்கள் என்பதால், மக்களுக்குப் புதிதாக வருபவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது விஜய் மீது அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. “திமுகவுடன் கூட்டணி இல்லை, பாஜகவுடனும் கூட்டணி இல்லை” என்பதை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்த பின்னர்தான் அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுக எதிர்ப்பு ஓட்டுகள், அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள், பாஜக எதிர்ப்பு ஓட்டுகள், இரண்டு கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு வெறுத்துப் போயிருக்கும் வாக்குகள், இளைய தலைமுறை வாக்குகள், பெண்கள் வாக்குகள், விஜய் ரசிகர்களின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் என ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய வாக்காளர் கூட்டமே விஜய் பக்கம் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
மொத்தத்தில், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி நடக்க இருக்கிறது என்றும், “எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் விஜய்யை தோற்கடிக்க முடியாது” என்றும், “மக்கள் புரட்சி செய்ய முடிவு செய்துவிட்டால், அதிமுக, திமுக கூட்டணி வைத்தாலும் அதை முறியடிக்க முடியும்” என்றும் அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா? ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து, ஒரு அடிப்படை கட்டமைப்பை வைத்திருக்கும் இரண்டு திராவிட கட்சிகளை, இரண்டு வருடமே ஆன ஒரு புதிய கட்சி வீழ்த்த முடியுமா? மக்கள் புரட்சி விஜய்க்கு கை கொடுக்குமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
