அதிமுக கூட்டணியில் பாமகவின் அப்பா-மகன் இரு அணிகளும் இணைகிறதா? ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு டாஸ்க்.. ஈபிஎஸ் எடுக்கும் ஆச்சரிய முடிவு.. தேமுதிகவையும் கூட்டணியில் சேர்க்க திட்டம்.. திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்குமா அதிமுக கூட்டணி? டிடிவி, ஓபிஎஸ்-ஐ சமாளிப்பது எப்படி?

தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள புதிய வியூகங்களும், டி.டி.வி. தினகரன் எடுத்திருக்கும் “தோற்கடித்தே…

eps

தமிழக அரசியல் களம் தற்போது வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள புதிய வியூகங்களும், டி.டி.வி. தினகரன் எடுத்திருக்கும் “தோற்கடித்தே தீர வேண்டும்” என்ற சபதமும் விவாத பொருளாகியிருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இருவேறு அரசியல் பயணங்கள் கூட்டணி அமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வுக்கு எதிராக தீவிரமான போராட்ட அரசியலை கையில் எடுத்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சிக்கல்களை முன்னிறுத்துவது முதல், சமீபத்திய SIR ஆதரவளிப்பது வரை ஆளும் கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறார்.

உட்கட்சி அளவில் மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி, “பூத் லெவலில் பக்காவாக வேலை செய்ய வேண்டும்,” “இளைஞர்களை அதிகளவில் கவர வேண்டும்,” மற்றும் “தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயல்பட வேண்டும்” என ஓயாமல் அறிவுறுத்தி வருகிறார்.

அ.தி.மு.க. வட்டாரங்கள் பணப் பலம் கணக்கை முன்வைக்கின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 15 முதல் 20 பேர் வரை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பலவீனமான தொகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் பெரிய அளவிலான நிதியை திரட்டித் தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் வெறும் 1000 முதல் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி, அங்கு கூடுதல் கவனம் செலுத்தினால், இந்த முறை நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.

அ.தி.மு.க.வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தி.மு.க.வை தோற்கடிக்க வலிமையான கூட்டணி அமைக்க விரும்புகின்றன. இதில் பா.ம.க.வின் பங்களிப்பு மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால், பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் நிலவுகின்றன.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தன் 100 நாள் பயணத்தில் தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், தி.மு.க.வுக்கு 13 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் விமர்சித்தார். இது பா.ஜ.க.-வின் மனதை குளிர வைக்கும் விதமாக உள்ளது. பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் வைஜயந்த் பாண்டா, அன்புமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் மருத்துவர் ராமதாஸ், சமீபத்தில் தன் சகோதரியை செயல் தலைவராக நியமித்தது, அன்புமணி தரப்பினரை சற்றுக் கொதிப்படைய செய்துள்ளது. இருவரும் இணைவதற்கான வாய்ப்பு குறைவு என்ற பேச்சு நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமி, மருத்துவர் ராமதாஸுடன் நெருங்கிய தோழமையை பேணி வருகிறார். பா.ம.க.வின் பலத்தால்தான் அ.தி.மு.க. கடந்த முறை தருமபுரி, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்றியது. எனவே, இம்முறை மருத்துவர் ராமதாஸ் கூட்டணிக் குள் வருவது எடப்பாடிக்கு அவசியம்.

பா.ம.க.வுக்குள் இருக்கும் இந்த முரண்பாட்டைக் களைய ஒரு “பிளான் B” பேசப்படுகிறது. அதாவது, பா.ஜ.க. கோட்டாவில் அன்புமணி தரப்புக்கும், அ.தி.மு.க. கோட்டாவில் ராமதாஸ் தரப்புக்கும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்து, இருவரும் அவரவர் கோட்டாவில் பரப்புரை செய்யாமல், ஆளும் தி.மு.க.வுக்கு எதிராகப் பொதுவான பரப்புரையை மேற்கொள்ள வைக்கலாம் என ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மருத்துவர் ராமதாஸுக்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது. பா.ம.க. தி.மு.க.வுடன் இணைந்தால், அது சேலம், தருமபுரியில் உள்ள எடப்பாடியின் கோட்டையை உடைக்க உதவும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.

பா.ம.க. கூட்டணியில் இணைந்தால், வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு நெருடல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இருப்பினும், வி.சி.க.வும் பா.ம.க-வும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று கூறி, வி.சி.க. தரப்பில் ஒரு ‘மென்மையான அணுகுமுறை’ காட்டப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எடுத்திருக்கும் ஒரே சபதம், “துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்தே தீர வேண்டும்” என்பதுதான். எடப்பாடியின் வெற்றிக்கு ஆதரவாக இருக்க கூடாது என்பதற்காகவே அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

அ.ம.மு.க., த.வெ.க. தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால், விஜய் இன்னும் யாருக்கும் கிரீன் சிக்னல் கொடுக்காமல் இருப்பதால், டி.டி.வி. தினகரன் தரப்பில் சற்று குழப்பமும், சோர்வும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தனது டார்கெட்டை நோக்கி ஓடுவோம் என்ற நம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தை பிறந்தால் அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எந்த கட்சிக்குத் தை சிறந்த வழியை காட்டும் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும்.