மொபைல் போன் மூலம் வங்கி கணக்கை அப்டேட் செய்ய முடியும் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் குறித்த விழிப்புணர்வு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, வங்கியில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் உங்கள் கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், உங்களுடைய வங்கி கணக்கின் விபரங்களை கூறுங்கள் என்று கேட்க மாட்டார்கள். இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சிலர் மோசடியான அழைப்பை நம்பி தங்களுடைய வங்கி கணக்கை கொடுத்து விடுவதால், மொத்த பணத்தையும் இழந்து விடும் அபாயம் இருந்து வருவதாக தெரிகிறது.
ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது மட்டுமின்றி, புதுப்புது விதமாக வேற லெவலில் யோசித்து மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களாக போன் மூலம் வங்கிக் கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு சிலர் போன் செய்து, அவர்களிடம் இருந்து டெபிட் கார்டு எண், ஓடிபி உள்ளிட்டவற்றை வாங்கி, அவர்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டிக் கொள்ளும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி உள்ளது.
இது குறித்து காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், போன் மூலம் உங்கள் வங்கி கணக்கை அப்டேட் செய்கிறோம் என்று யாராவது விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டாம். இதற்கு உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.