இனிமேல் பெர்சனல் லோன் வாங்க முடியாதா? ரிசர்வ் வங்கி புதிய விதியால் அதிர்ச்சி..!

  கடந்த சில வருடங்களாக பர்சனல் லோன் என்பது கூப்பிட்டு கூப்பிட்டு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளதால் இனி அவ்வளவு…

Personal Loan

 

கடந்த சில வருடங்களாக பர்சனல் லோன் என்பது கூப்பிட்டு கூப்பிட்டு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளதால் இனி அவ்வளவு லேசில் பர்சனல் லோன் பெற முடியாது என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்சனல் லோன் என்பது ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் மட்டுமே பர்சனல் லோன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு ஒருமுறை சிபில் ஸ்கோர் கணக்கிடப்பட்டு வந்த நிலையில், இனி 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சிபில் ஸ்கோர் அப்டேட் செய்வதால், ஒரு மாதத்தின் தொடக்கத்தில் நல்ல சிபில் ஸ்கோர் இருப்பின் பர்சனல் லோன் பெறும் ஒரு நபர், அதன் பிறகு சில தவணைகளை செலுத்தாமல் விட்டுவிட்டு, அந்த மாதத்திற்குள் இன்னொரு கடனையும் பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ஒரு தவணையை கட்ட தவறிவிட்டால், 40 நாட்கள் கழித்துதான் அது சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்ற நிலையில், அதற்குள் இரண்டு அல்லது மூன்று பர்சனல் லோன்களை பெறுவதை தடுக்கும் வகையில், இனி 15 நாட்களுக்கு ஒருமுறை சிபில் ஸ்கோர் அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டே பர்சனல் லோன் வழங்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு பர்சனல் லோன்களை பெற முடியாது என்றும், ஒருவர் தன்னால் திருப்பிச் செலுத்தக்கூடிய தொகையை விட அதிக கடனை பெறும் அபாயம் இருப்பதால் இது தடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடன் தவணை திருப்பிச் செலுத்தாமல் விட்டதை மறைத்து புதிய கடனை பெறுவதில் இருந்து தடுப்பதற்கும், ஒருவரே பல பர்சனல் லோன்களை ஒரு சில நாட்கள் இடைவெளியில் பெறுவதை தடுப்பதற்கும் இந்த புதிய விதிமுறை உதவும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், பர்சனல் லோன் வழங்கும் நிதி நிறுவனங்கள், மாதத் தவணையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது என்றும், தவணைக் காலத்தை மாற்றுவது தொடர்பாக கடன் பெற்றவரின் ஒப்புதலை பெற்ற பிறகு மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த புதிய விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.