இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே ஹெல்மெட் அவசியம் என்ற விதி இருக்கும் நிலையில் சில சமயம் தானியங்கி எந்திரம் மூலம் கார் டிரைவர்களுக்கும் ஹெல்மெட் போடாததால் அபராதம் விதிக்கப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் நொய்டாவில் கார் டிரைவர் ஒருவர் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சாலை விதிமுறைகளை மீறிவிட்டதால் ரூ.1000 அபராதம் என்று மெசேஜ் வந்தது.
இது குறித்து முழுமையான விவரம் ஈமெயிலில் வந்த போது அதை அவர் படித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதில் நீங்கள் காரை டிரைவ் செய்து கொண்டிருந்தபோது ஹெல்மெட் போடவில்லை என்பதால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறை அதிகாரியிடம் சென்று கார் டிரைவருக்கு எதுக்காக ஹெல்மெட்? ஏன் அபராதம் விதித்தீர்கள் என்று கேட்டபோது நீங்கள் அபராதத்தை செலுத்தி விட்டு செல்லுங்கள், அதன் பிறகு இது குறித்து விசாரணை செய்வோம் என்று கூறியதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் அணியவில்லை என்பதால் கார் டிரைவருக்கு அபராதம் விதிப்பது முதல் முறை அல்ல என்றும் பல இடங்களில் இது போல் வந்துள்ளது என்றும் இந்த செய்திக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. மேலும் ஒரு பயனாளி எனது பிஎம்டபிள்யூ காரில் சென்றபோது ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் தினமும் நான் ஹெல்மெட் அணிந்துதான் செல்கிறேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.