காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் என்பதால் காஷ்மீர் பகுதியின் சுற்றுலா துறைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் உள்ள முன்னணி ஓட்டல் அதிபர் ஒருவர் கூறுகையில், ‘”எங்களது ஏழு ஓட்டல்களில் இருந்து நாங்கள் ஏறத்தாழ 500 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது. மற்ற ஹோட்டல்களும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என கூறினார்.
சுற்றுலா ஒன்றே காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதன்மை வருமான மூலமாக இருந்தது. அதை ஊக்குவிக்க அரசு மற்றும் இந்திய விமான நிறுவனங்களும் பல முயற்சிகள் எடுத்தன.
அதன் விளைவாக, கடந்த ஆண்டு சுற்றுலா வருகை 30 லட்சத்தை கடந்தது. 2018ல் இது 8.31 லட்சம் மட்டுமே இருந்தது. கோவிட் காலத்தில் பின்னர் சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு அதிகளவில் வருகை தந்தனர் என அரசு தரவுகள் மூலம் தெரிய வந்தது.
ஆனால், ஏப்ரல் 22 தாக்குதல் நடந்த பிறகு, சுற்றுலா பயணிகள் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். ஓட்டல் முன்பதிவுகள் பெருமளவு குறைந்தது, கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.12 கோடி மதிப்புள்ள முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு மே 20 வரை இருந்த அனைத்து முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டது என்று சுற்றுலா துறை நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதனால் இளைஞர்கள் வேலை இழக்கும் நிலை அதிகரிப்பதாகவும், மீண்டும் கற்கள் வீசும் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
“இப்போது காஷ்மீரின் நிலை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இது 1990களில் பயங்கரவாதம் ஆரம்பமான நேரத்தை போலவே இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் தவித்த காலம் போல் இப்போது இருப்பதால் மத்திய அரசும் காஷ்மீர் அரசும் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.