பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி, இருநாட்டு தூதரக உறவுகளை துண்டித்ததற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இன்று அனைத்து இருபக்க ஒப்பந்தங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டதாகவும், இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடியதாகவும் அறிவித்துள்ளது.
1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் முடிந்த பிறகு, 1972-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட முக்கிய அமைதி ஒப்பந்தமான சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து இருநாட்டு ஒப்பந்தங்களையும், இந்தியா தனது அணுகுமுறையை மாற்றும் வரை இடைநிறுத்துவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த தீர்மானம், ஏப்ரல் 22-ஆம் தேதி 26 உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃவின் தலைமையில் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது.
இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதையும், பாகிஸ்தான் கடுமையாக கண்டித்து, “இந்த ஒப்பந்தம் 24 கோடி பாகிஸ்தானியர்களுக்கான உயிர் வாழ்வாதாரம்’ என கூறியுள்ளது. இந்தியா இந்த நீரை வேறுதிசையில் திருப்பும் முயற்சி எடுப்பதாக இருந்தால், அதை “போர் செயல்” என கருதுவோம் என எச்சரித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் எதிராக எந்தவிடஹ் அச்சுறுத்தலாக இருந்தாலும் கடுமையான பதிலடி அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியான அறிக்கையில், “பாகிஸ்தானின் முழுமையான உரிமை, பாதுகாப்பு, இறையாட்சி ஆகியவற்றுக்கு எதிரான எந்த அச்சுறுத்தலையும், அனைத்து தளங்களிலும் தக்க பதிலடி அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி, இந்தியா 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான இந்துஸ் நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாகவும், பாகிஸ்தானுடன் உள்ள தூதரக உறவுகளை துண்டிப்பதாகவும் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் டார் ஒரு தனியார் தொலைக்காட்சியிடம் பேசியபோது, “இந்தியாவின் நடவடிக்கை குழந்தைத்தனமானது, அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு” என கடுமையாக விமர்சித்தார்.
“இந்தியா எந்த ஆதாரமும் வழங்கவில்லை. அவர்கள் தங்கள் பதிலில் எந்த முதிர்ச்சியையும் காட்டவில்லை,” என்று கூறிய டார், “சம்பவம் நடந்த உடனே பெரும் பரபரப்பை உருவாக்கத் தொடங்கினர். இது பொறுப்பற்ற அணுகுமுறை” என்றும் குற்றம்சாட்டினார். பாகிஸ்தானின் வெளிவிவகார அலுவலகம், உயிரிழப்புக்கு தாங்கள் வருத்தம் தெரிவிக்கின்றோம் என்றும் தனியாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
தூதரக உறவுகள் துண்டித்தல், நீர் ஒப்பந்த தற்காலிக நிறுத்தம் ஆகியவை இருநாட்டு உறவுகளை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கும் பாகிஸ்தான், இது 2019-ம் ஆண்டு புல்வாமா–பாலகோட் சர்ச்சைக்குப் பிறகு தொடர்ந்துவரும் பிளவுகளை மேலும் விரிவாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், எதிர்காலத்தில் சமாதான முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டின் முன்னணி நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழியை மூடி உள்ளதால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் பதிலடி என நினைத்து காமெடி செய்து வருகிறது என்றும் இந்தியர்கள் அறிவித்துள்ளனர்