தமிழக அரசியலில், எதிர்க் கட்சிகளை வீழ்த்துவது என்பதைவிட, ஒரே ஒரு தனிப்பட்ட தலைவரான எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே பல்வேறு அரசியல் சக்திகளின் பிரதான இலக்காக மாறியுள்ள ஒரு அபூர்வமான காட்சியை நாம் பார்க்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, உட்கட்சி பூசல்களையும் எதிர்ப்புகளையும் சமாளித்து அதிமுகவை தன் வசம் கொண்டுவந்த ஈபிஎஸ், இன்று அவரது சொந்த கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர்களாலும், அரசியல் சகாக்களாலும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறார். எடப்பாடியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சில அரசியல் சக்திகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் முன்னாள் பிரமுகர்கள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் என கருதப்படும் ஒரு பெரிய பிரிவினர், ஈபிஎஸ்ஸை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் வெளிப்படையாக களமிறங்கியுள்ளனர். தலைமைப் போட்டியில் ஈபிஎஸ்ஸிடம் தோற்ற ஓ. பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகியோர், ஈபிஎஸ்ஸை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளனர். இவர்கள் மூவரும், அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதைவிட, அதிமுகவில் ஈபிஎஸ்ஸின் ஆதிக்கத்தை முடிவுக்கு வர வேண்டும் என்பதையே முக்கிய அரசியல் குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஈபிஎஸ்ஸை வீழ்ந்தால் போதும், அதிமுக தோற்று எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, அதற்காக எந்த முடிவையும் எடுக்கத் தயார் என்பதையே இவர்களின் சமீபத்திய நகர்வுகள் காட்டுகின்றன.
அதிமுகவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் திடீரென விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும் ஈபிஎஸ்ஸுக்கு எதிரான பகையின் இன்னொரு வெளிப்பாடாகும். உட்கட்சி ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஈபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் முடியாமல் போன நிலையில், அவருக்கு சவால் விடவே செங்கோட்டையன் புதிய பாதையை தேர்ந்தெடுத்தார் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் நோக்கம், அதிமுகவின் வாக்குகளை பிரித்து, ஈபிஎஸ்ஸின் தலைமையின் கீழ் அதிமுக தோல்வியடைவதை உறுதி செய்வதே அவரது முக்கிய இலக்காக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து விலகி சென்று ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்களின் பட்டியல், ஈபிஎஸ் மீதான வெறுப்பின் தீவிரத்தை மேலும் காட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியுள்ளனர். இவர்களில் பலர், ஈபிஎஸ்ஸின் தலைமையின் கீழ் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்று கருதியவர்கள். அவர்கள் திமுகவில் இணைவதன் முதன்மை காரணம், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், அவரை வீழ்த்துவதும், தங்களுக்கு சாதகமான அரசியல் களத்தை அமைத்துக் கொள்வதும்தான்.
அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஈபிஎஸ்ஸை சுற்றி இவ்வளவு பெரிய எதிர்ப்பு குழு திரண்டு நிற்பதற்கான காரணங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ், சசிகலா குடும்பம் மற்றும் டிடிவி தினகரனை அரசியல் ரீதியாக முறியடித்து, அதிமுகவை தன் வசம் கொண்டுவந்த விதம், பலரின் மனதில் கசப்பையும் துரோக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், உட்கட்சி பூசல்களுக்குப் பிறகு, ஈபிஎஸ் தனது தலைமையின் கீழ் இருக்கும்போது, கட்சியை கட்டாயமாக ஒருங்கிணைக்க போவதில்லை என்ற பிடிவாதமான நிலைப்பாடு எடுப்பது, இந்த தலைவர்களை நிரந்தர எதிரிகளாகவே வைத்திருக்கிறது.
ஈபிஎஸ்ஸை தோற்கடிக்க வேண்டும் என்ற இந்த குறிக்கோள், வரவிருக்கும் தமிழக தேர்தல் களத்தை முற்றிலும் மாற்றியமைக்கும். இந்த எதிர்ப்புக் குழுக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திமுக அல்லது தவெக போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈபிஎஸ்ஸை தோற்கடிக்க முயல்வார்கள். இது திமுக, அதிமுக, தவெக இடையேயான முப்பரிமாண போட்டியை உறுதிப்படுத்துகிறது. அதிமுகவுக்கு எதிராக இந்த அரசியல் சக்திகள் செயல்படும்போது, கட்சியின் பாரம்பரிய வாக்குகள் பெரிய அளவில் சிதறும். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஈபிஎஸ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அவருடைய தலைமை தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக மாறும். ஒருவேளை தோல்வியடைந்தால், இவரை எதிர்த்து அணி திரண்ட அத்தனை சக்திகளின் இலக்கும் நிறைவேற்றப்பட்டு, அதிமுகவின் தலைமை மீண்டும் கேள்விக்குறியாகலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
