புது டில்லி : நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறையாகப் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவனின் படம், சீக்கியர்கள் குருவான குருநானக் ஆகியோர் படங்களைக் கையில் எடுத்து உரையாற்றினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா கடவுள் படத்தினைக் காட்டி உரையாற்றுவதற்கு அனுமதி இல்லை என்று கண்டித்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய ராகுல் காந்தி, ”மக்களவையில் சிவன் படத்தினைக் காட்ட அனுமதி இல்லையா? சிவன் கையில் உள்ள திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல, அஹிம்சைக்கானது. பா.ஜ.க அரசில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரத்தினை விட உண்மையை நம்புகிறவன் நான். பா.ஜ.வினர் உண்மையான இந்துக்கள் அல்ல..” என்று பேசினார். இதற்கு பா.ஜ.க எம்பிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் ராகுல் காந்தி, ”பிரதமர் மோடி ஒன்றும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.க 24 மணி நேரமும் வெறுப்புணர்வைத் தூண்டுகிறது” என்று பேசினார்.
இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்துக்கள் குறித்த தனது பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்தியின் பேச்சு அபாண்டம் எனவும் கண்டனம் தெரிவித்தார். மக்களவையில் இன்று ராகுல் காந்தி கடவுள் படத்தினைக் காட்டிப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.