ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. தனது நிறுவனத்தை விட, தனது குழந்தை தற்போது தானாக சாப்பிடுவதை பார்ப்பதே மிகப் பெரிய விஷயமாக உணர்கிறேன் என்று அவர் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே ஓபன் ஏஐ நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பார்த்து வியந்த நிலையில், அந்த நிறுவனத்தின் சொந்தக்காரரான சாம் ஆல்ட்மேன், “என் குழந்தை தானாக சாப்பிடக் கற்றுக்கொண்டது, என் நிறுவனத்தின் சாதனையை விட பெரிய விஷயமாக உணர்கிறேன்” என்று கூறியிருப்பது, ஒரு புறம் ஆச்சரியத்தையும், இன்னொரு புறம் ஒரு இயல்பான தந்தையின் உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒலிவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “என்னுடைய குழந்தை, பிரசவ நேரத்துக்கு முன்கூட்டியே பிறந்ததால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறது. என் வாழ்க்கையில் நான் எப்போதும் ஓபன்ஐ நிறுவனத்தை தொடங்கியதே மிகப்பெரிய பெருமையாக நினைத்தேன். ஆனால் இப்போது, என் குழந்தை தனியாக உணவு சாப்பிடக் கற்றுக்கொள்ளும் தருணத்தை காணும்போது, இதைவிட பெருமை வேறு எதுவும் இல்லை என உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தாலும், அவரும் ஒரு சாதாரண தந்தைதான். தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பெருமைப்பட்டு ரசித்துக் கொண்டிருப்பதை, அவரது இந்த பதிவில் இருந்து தெளிவாகக் காண முடிகிறது என கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.