அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்திருந்தாலும், அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க. முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், ஓ.பி.எஸ்.ஸுக்கு இரண்டு முக்கிய வழிகளே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒன்று புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பி.எஸ். இணையலாம். இதன் மூலம், விஜய்யின் கட்சிக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் கிடைப்பார். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸுக்கு இருக்கும் செல்வாக்கும், அவரது சமூகத்தின் வாக்குகளும் விஜய்க்கு கணிசமான அளவுக்கு உதவக்கூடும். அப்படி நடந்தால் ஓ.பி.எஸ்.ஸுக்கு விஜய்யின் கட்சியில் அவைத் தலைவர் போன்ற ஒரு மரியாதைக்குரிய பதவி வழங்கப்படலாம்.
இன்னொன்று பா.ஜ.க. ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்தி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க முயற்சிக்கலாம். ஒருவேளை அவர் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால், பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகளில் சிலவற்றை ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்காக பெற வாய்ப்புள்ளது.
அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, ஓ.பி.எஸ். தி.மு.க. பக்கம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக அரசியல் செய்தவர் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர். அத்தகைய உயர்ந்த பதவிகளை வகித்த ஒருவர் தி.மு.க.வுக்கு செல்வது, அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுவது போன்றது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், அது அவரது அரசியல் கொள்கைகளுக்கும், அவர் வகித்த பதவிகளுக்கும் முரணானது.
எனவே, ஓ.பி.எஸ். தனது அரசியல் எதிர்காலத்திற்காக விஜய் அல்லது பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளில் ஒன்றுடன் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
