மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய ஃபிரிட்ஜை திறந்து ஒரு புகைப்படம் எடுத்து, “என்னுடைய ஃபிரிட்ஜில் எதுவுமே இல்லை, வாங்குவதற்கு காசு இல்லை. ஸ்விக்கி நிறுவனம் ஏதாவது அனுப்பினால் நன்றாக இருக்கும்” என கேலியாக ஒரு ட்வீட் பதிவு செய்தார்.
இந்த ட்வீட்டை சீரியஸாக எடுத்துக்கொண்ட ஸ்விக்கி நிறுவனம், அந்த இளைஞருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி, அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, இவ்வாறு சமூக வலைதளங்களில் வெளியான கேலி பதிவுகளை நிறுவனங்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் அல்லது எதாவது பதிலளிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தன்னுடைய வீட்டில் ஒரு பொருளும் இல்லை, ஃபிரிட்ஜ் காலியாக இருக்கிறது என்று புகைப்படம் எடுத்து அனுப்பிய இளைஞரின் ட்விட்டை ஸ்விக்கி நிறுவனம் சீரியஸாக எடுத்துக்கொண்டு, உடனடியாக அவருக்கு தேவையான பொருள்களை அனுப்பி வைத்தது.
இதனை பார்த்த அந்த இளைஞர் ஆச்சரியமடைந்து, “நான் இவ்வளவு பொருட்களை ஆர்டர் செய்யவில்லையே!” என்று கூற, டெலிவரி மேன்கள் “எல்லாமே உங்களுக்கு இலவசம், எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினர். இது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், ஸ்விக்கி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறது என்ற நல்ல பெயரை பெற்றுள்ளது. இது கோடி ரூபாய் செலவு செய்தாலும் கிடைக்காத ஒரு சிறந்த விளம்பரமாக மாறியுள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான பொருள்கள் வழங்கியதன் மூலம், இது ஒரு வகையான பிஸினஸ் டெக்னிக் தான் என்றும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவிட்டு வருகின்றனர்.