ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை பெயரில் மோசடி நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப்பில் உள்ள சில செட்டிங்குகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய இன்டர்நெட் உலகில், இன்டர்நெட் மூலம் ஏராளமான பயன்களை பொதுமக்கள் பெறுகின்றனர். அதே நேரத்தில், இதை வைத்து நடைபெறும் மோசடி மற்றும் முறைகேடுகளால் ஏராளமானோர் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
அந்த வகையில், பங்குச்சந்தையில் அதிக லாபம் பார்க்கலாம் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மெசேஜ்கள் அனுப்பி மோசடி செய்யும் முறை சமீப காலமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பங்குச்சந்தை முதலீடு செய்து பயிற்சி அளிப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முதலில் மெசேஜ்கள் அனுப்புவார்கள். குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற முடியும் என்ற ஆசை வார்த்தைகளை காட்டி, அதை நம்பி பணத்தை முதலீடு செய்தால், ஆரம்பத்தில் லாபம் வருவது போல தோன்றும். அதை நம்பி பெரிய தொகையை முதலீடு செய்த பிறகு, பணத்தை எடுக்க முடியாமல் போகும். அந்த வாட்ஸ் அப் நம்பர் திடீரென காணாமல் போகும்.
இப்படியான புகார்கள் சைபர் கிரைமில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், இந்த மோசடியில் இருந்து தப்பிக்க வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு முக்கிய செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் உங்களை ஏதாவது ஒரு குரூப்பில் சேர்ப்பதாக இருந்தால், அதற்கான அனுமதியை வழங்க கூடாது. அப்படியே அனுமதி வழங்குவதாக இருந்தாலும், அது உண்மையாக நம்பத் தகுந்த நிறுவனமா என்பதை உறுதி செய்து கொண்டு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒரு செட்டிங்கை மட்டும் சரியாக செய்தால், வாட்ஸ் அப் மூலம் பங்குச்சந்தை மோசடியை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.