ஆன்லைன் மூலம் விதவிதமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீப காலமாக, “உங்களுக்கு பரிசு வந்திருக்கிறது” என்றும், அதை பெற வேண்டும் என்றால் ஓடிபி கூற வேண்டும் என்றும் சொல்லி, ஓடிபி ஏமாற்றி சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கை காலி செய்து விடும் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், ஒரு இளம்பெண்ணுக்கு வந்த மின்னஞ்சலில், “உங்களுக்கு 30 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. உடனே இதனை பதிவு செய்யுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. அந்த இளம் பெண், சம்பந்தப்பட்ட லிங்கை கிளிக் செய்து, தன்னுடைய விவரங்களை பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் வங்கி கணக்கு விவரங்களையும் பதிவு செய்ததால், சில நாட்களில் தனது வங்கிக் கணக்கில் இருந்த முழு பணமும் எடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வங்கியில் நேரில் சென்று விசாரித்த போது, மோசடி சாப்ட்வேர் மூலம் பணம் திருடப்பட்டதாகவும், பரிசுகள் என கூறி யாராவது மெசேஜ் அனுப்பினால், உடனே அதை டெலிட் செய்து வேண்டும் என்றும் வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இன்னொரு புதுவிதமான மோசடி என்னவெனில் மர்ம நபர்கள், நமக்கு தொலைபேசியில் அழைத்து, “என்னுடைய பான் கார்டில் உங்கள் தொலைபேசி எண்ணை தவறாக கொடுத்து விட்டேன். இப்போது ஒரு ஓடிபி வரும், தயவுசெய்து அதை மட்டும் சொல்லுங்கள். அதன் பிறகு, நான் என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்றிக் கொள்வேன்” என்று கூறுவர்.
மேலும், வாட்ஸ்அப்பில் தங்களது போலியான பான் கார்டு அல்லது ஆதார் அட்டையை அனுப்பி வைப்பார்கள். நாமும், பாவம் என்று நினைத்து நமக்கு வரும் ஓடிபியை சொல்லிவிட்டால், அடுத்த நிமிடமே நமது வங்கி கணக்கில் உள்ள பணம் ஒரு பைசா கூட மீதமில்லாமல் எடுக்கப்படும்.
எனவே, பரிசுகள் பற்றிய போலி மின்னஞ்சல்கள் மற்றும் அழைப்புகளை புறக்கணியுங்கள். ஓடிபி எண்ணை யாருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும் வழங்காதீர்கள். உங்கள் சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!