தேனி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக்காக பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். குறிப்பாக சபரிமலைக்கு தேனி மாவட்டம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தேனி கம்பம் குமுளி வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசன் காலங்களில் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, சபரிமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு எளிதாக சென்று வருவதற்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டும் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. நாளை முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி வரை இந்த ஒருவழிப்பாதை திட்டம் அமலில் இருக்கும்.
எனவே சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு கட்டப்பனை வழியாக செல்ல வேண்டும். சபரிமலைக்கு சென்று திரும்பி வரும் வாகனங்கள் வண்டிப்பெரியாறு, குமுளி, குமுளி மலைப்பாதை, கூடலூர், கம்பம் வழியாக வர வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் பனிமூட்டம் மற்றும் மழைப்பொழிவு தொடர்பான வானிலை அறிவிப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த பாதையில் பயணம் செய்வோர் சாலைவிதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சபரிமலையில் (பிளாஸ்டிக்) நெகிழி பொருட்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த வழித்தடம் வழியாக செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.