வட கிழக்குப் பருவமழை தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகப் பெய்து வருகிறது. கடந்த 1-ம் தேதிக்குப் பிறகு பரவலாக மழை குறைந்து வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை தொடர்ந்து பெய்து வந்தது.
இருப்பினும் அது பலத்த மழையாகப் பெய்யவில்லை. மேலும் சராசரி அளவை விட அதிகமாக மழைப்பொழிவும் இந்த ஆண்டு பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே தமிழகத்தின் முக்கிய அணைகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பிக் காட்சியளிக்கின்றன. மலைப் பிரதேசங்களில் மழைப் பொழிவு தொடர்ந்து பெய்து வருகிறது.
தலைநகர் சென்னையிலும் கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டானா புயலாக மாறியது. இதனால் அக்டோபர் மாதம் இரண்டு நாட்களில் பலத்த மழை பெய்தது. இந்தப் டானா புயல் மேற்கு வங்கம், ஒரிசா இடையே கரையைக் கடந்தததால் சென்னை தப்பித்தது. தற்போது சென்னைக்கு அடுத்த எச்சரிக்கை ஆரம்பமாகியுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இனி நேரா பம்பையில் போய் இறங்கலாம்.. கேரள அரசின் வாவ் அறிவிப்பு..
தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ள பதிவில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 12 முதல் சூடுபிடிக்கத் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பலத்த மழைப் பொழிவு இருக்கும் எனவும் கூறியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் சென்னை மக்கள் மழை, புயலால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு வடிகால் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மழைநீர் தேங்கி நிற்பது தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் மழை எச்சரிக்கை விடப்பட்டவுடன் தங்களது பொருட்கள், வாகனங்களை பத்திரமாக எடுத்து வைக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டனர். குறிப்பாக கார், பைக் போன்ற வாகனங்களை கடந்த மாதம் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிசம்பர் மாதம் என்றாலே சென்னையை மழை புரட்டிப் போடுகிறது. இனி பருவமழை அதிகரிக்கும் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.