நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார். இந்த நட்பு காதலாக மாறிய நிலையில் அவர் ஒரு மாதத்திற்குள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களை இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவை சேர்ந்த தல்ஜீத் சிங் என்ற தொழிலதிபர், சமீபத்தில் டேட்டிங் செயலி மூலம் அனிதா என்ற பெண்ணுடன் நட்பு கொண்டார். அந்த பெண் முதலில் நட்பாக பேசியதாகவும், பின்னர் இந்த நட்பு காதலாக மாறியதாகவும், இருவருக்குமான உரையாடல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அனிதா தனக்கு தெரிந்த ஒரு இணையதளம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவரை ஆசை வார்த்தைகளால் மனதை மாற்றினார். அதனை நம்பி, தல்ஜீத் சிங் முதலில் மூன்று லட்சம் முதலீடு செய்தார். சில மணி நேரங்களில் அவருக்கு 24 ஆயிரம் லாபம் கிடைத்தது. அந்த பணத்தை அவர் கணக்கில் திரும்ப பெறவும் முடிந்தது.
இதனால், அனிதாவின் கூற்றுகள் உண்மை என்று நம்பிய அவர், காதலால் கண்மூடித்தனமாக தனது வாழ்நாள் சேமிப்பான 4.5 கோடி ரூபாயை முதலீடு செய்தார். அதுமட்டுமின்றி, தனது நண்பர்களிடம் 2 கோடி ரூபாய் கடன் வாங்கி அதையும் முதலீடு செய்தார். 30 பண பரிவர்த்தனைகளில், 25 வங்கி கணக்குகளுக்கு அவர் தனது 6.5 கோடி ரூபாயை மாற்றிய நிலையில், அது மிகப்பெரிய லாபம் பெற்றதாக காட்டப்பட்டது.
ஆனால், அதே நேரத்தில் அவர் பணத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, பணத்தை பெற முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார். அனிதாவின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. மேலும், அவர் பரிந்துரை செய்த மூன்று டிரேடிங் இணையதளங்களும் போலியானவை என்று தெரியவந்தது.
இதையடுத்து, அவர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அவருடைய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில வாரங்கள் மட்டுமே டேட்டிங் செயலியில் காதலித்த தொழிலதிபர், தனது மொத்த சொத்துகளையும் இழந்ததோடு, இன்னும் 2 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.