இந்தியாவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனரின் ஆச்சரியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு, இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி, முழு ஸ்டாக் தொழில்நுட்ப தலைமைப் பதவிக்கு (full-stack tech lead) ஆண்டுக்கு ரூ. 1 கோடி சம்பளத்துடன் ஆட்கள் தேவை என்றும், இந்த பணிக்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஏன், ரெஸ்யூம் கூட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மாலஸ்ட் ஏஐ (Smallest AI) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் சுதர்ஷன் காமத், தனது X பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த பதவிக்கு சம்பளம் ரூ. 1 கோடி என்றும், இதில் ரூ. 60 லட்சம் நிலையான ஆண்டு சம்பளமாகவும், மீதமுள்ள ரூ. 40 லட்சம் நிறுவன பங்குதாரர் சலுகையாகவும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிக்கு உடனடியாக சேர வேண்டும் என்றும், வாரம் ஐந்து நாட்கள் கண்டிப்பாக அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும், சில சமயங்களில் மட்டும் நெகிழ்வுத்தன்மை இருக்கும் என்றும் காமத் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
“ஸ்மாலஸ்ட் ஏஐ நிறுவனத்தில் ஒரு சிறந்த முழு ஸ்டாக் தலைமை பதவிக்கு ஆள் எடுக்கிறோம்!” என்று காமத் பதிவிட்ட இந்த அறிவிப்பு, சில மணி நேரங்களிலேயே 60,000 பார்வைகளை கடந்து வைரலானது. வழக்கமான வேலைவாய்ப்பு அறிவிப்புகளிலிருந்து விலகி, முற்றிலும் வித்தியாசமாக இருந்ததுதான் இதன் தனிச்சிறப்பு. விண்ணப்பதாரர்கள் ரெஸ்யூம் அல்லது கல்வி பின்னணி எதையும் சமர்ப்பிக்க தேவையில்லை. மாறாக, தங்களை பற்றி 100 வார்த்தைகளில் ஒரு சிறு குறிப்பையும், தாங்கள் செய்த “சிறந்த பணிகளின்” இணைப்புகளையும் மட்டும் சமர்ப்பித்தால் போதும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு “4 அல்லது 5 வருட அனுபவம்” இருக்க வேண்டும் என்றும், “Next JS, Python, மற்றும் React JS” போன்ற தொழில்நுட்பங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் காமத் குறிப்பிட்டுள்ளார். மேலும், “புதிதாக ஒரு சிஸ்டத்தை உருவாக்கி, அதை பெரிய அளவில் மேம்படுத்திய அனுபவம் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கருதப்படும்” என்றும் அவர் தனது பதிவில் சேர்த்துள்ளார்.
இந்த வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமூக ஊடகங்களில் உடனடியாக பரவியது. பயனர்கள் இந்த வித்தியாசமான வேலைவாய்ப்பு அணுகுமுறையை பாராட்டியும், சலுகையின் விதிமுறைகள் குறித்தும் ஆர்வமாக விவாதித்தனர்.
ஒரு பயனர், “மாதத்திற்கு 3.4 லட்சம் ரூபாய் ஒரு இளங்கலை பட்டதாரிக்கு நல்ல பணம். ஆனால், திருமணமான ஒருவருக்கு இது அவ்வளவு பெரிய தொகையாக தோன்றவில்லை, சாதாரணமானதுதான்” என்று கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர், தொலைதூர வேலைக்கான நெகிழ்வுத்தன்மையின் தேவையை வலியுறுத்தி, “இது ஒரு சிறந்த வாய்ப்புதான், ஆனால் குறைந்தபட்சம் hybrid வேலைவாய்ப்பாவது இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கருத்து தெரிவித்தார்.
இன்னொரு பயனர், ‘பள்ளிக்கூடம் போகாமலே.. பாடங்களை படிக்காமலே.. என்ற பாடலை குறிப்பிட்டு டிகிரி வேண்டாம், ரெஸ்யூம் வேண்டாம், சம்பந்தப்பட்ட துறையில் திறமை இருந்தால் போதும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு, பாரம்பரிய வேலைவாய்ப்பு முறைகளால் அதிருப்தியடைந்துள்ள இளம் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பை விட நிரூபிக்கக்கூடிய திறமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முறையான கல்வி தகுதிகள் மற்றும் ரெஸ்யூம்கள் தேவையில்லை என்பதை நீக்கியதன் மூலம், காமத்தின் இந்த அறிவிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த விதிமுறைகளுக்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளது.
இந்த வைரலான அறிவிப்பை வெளியிட்ட ஸ்மாலஸ்ட் ஏஐ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் ஒரு புதுமையான ஸ்டார்ட்அப் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
