நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!

By Bala Siva

Published:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரி குறித்து நகைச்சுவையாக பேசிய கோவை ஹோட்டல் தொழில் அதிபர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோவை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடிய போது அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ஜிஎஸ்டியில் உள்ள சிக்கல் குறித்து பேசினார்.

அதில் பன்னுக்கு வரியில்லை, ஆனால் அதில் கிரீம் கலந்தால் 18 சதவீத வரி என்பதால் பில் போட கம்ப்யூட்டர் திணறுகிறது என்று அவர் கூறியதோடு இனிப்புக்கும் காரத்துக்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சீனிவாசன் அவர்கள் ஜனரஞ்சகமாக பேசி இருந்தார், அது தவறு இல்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எழுந்து நின்று அவர் கைகூப்பி இருப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

ஆனால் இந்த வீடியோவை உணவகம் தரப்பிலோ அல்லது பாஜக திறப்பிலோ வெளியிடவில்லை என்ற நிலையில் இந்த வீடியோவை யார் வெளியிட்டது என்பது மர்மமாகவே உள்ளது.