சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தமிழக செஸ் வீரர் குகேஷ் நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். 18 வயதில் இந்த சாதனையைப் பெறும் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதன் மூலம் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் பரிசுத் தொகையாக ரூ.11 கோடி கிடைத்தது. தமிழக அரசு சார்பிலும் ரூ. 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு சென்னையில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் குகேஷிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் குகேஷுக்குக் கிடைத்த பரிசுத் தொகைக்கு இந்திய வருமான வரிச் சட்டப்படி அவர் 4 கோடி வரை வரி செலுத்த நேரிடும். இந்த வரி முறையானது விமர்சனத்திற்கு உண்டானது. எனவே விளையாட்டில் பரிசுத் தொகை பெறும் வீரர்களுக்கு வரிச்சலுகை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உலக செஸ் சாம்பியனாக குகேஷ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை சுமார் 11 கோடியில் 4 கோடிக்கும் மேல் வரியாக கட்டும் சூழல் உண்டாகியிருக்கிறது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது போல், குகேஷுக்கும் வரிச்சலுகை வழங்கினால் அது இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும்.
அதே போல் குகேஷின் சாதனையை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழியில் ஒன்றிய அரசும் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
உலக சாதனையை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும்.
இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா.