கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MyV3Ads என்ற செயலி, செல்போனில் வீடியோ பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்திய நிலையில் குறைந்தபட்சம் ரூ.360 முதல் அதிகபட்சம் ஒரு லட்சத்து 21 ஆயிரம் வரை முதலீடு செய்யலாம் என்றும் முதலீட்டிற்கு தகுந்த வகையில் தினசரி ரூ.5 முதல் ரூ.1800 வரை சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்தியது.
இந்த செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் மோசடி புகார்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததை எடுத்து காவல்துறையினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் நிறுவனர் விஜயராகவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் நாங்கள் உண்மையானவர்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் அதிரடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து MyV3Ads செயலி நீக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே முதலீட்டு பணமும் வரவில்லை, வருமான பணமும் வரவில்லை என்று ஏராளமானோர் புகார் அளித்திருக்கும் நிலையில் திடீரென இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து MyV3Ads நிர்வாகிகள் விளக்கம் அளித்த போது இது ஒரு வழக்கமான நடைமுறை தான் என்றும் எங்களது நிர்வாக இயக்குனர் சிறையில் இருப்பதால் அவர் வெளியில் வந்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி வருகின்றனர் ஆனால் நிலைமை சரியாகும் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.